Monday, May 4, 2009

கண்ணாளனே!

என் இதயத்துள்
ஒரு பிரளயம்
மௌனமாக புரள
ஆரம்பிக்கிறது..
இப் பொற்கொடியாள்
துடிப்பதை நீ
அறிவாயா?

என் அன்பே!
என் அங்கத்தை
அணுஅணுவாக
வெட்டிச் சாய்த்துக் கேள்
ஒவ்வொன்றுமே
உன் நாமத்தை
உச்சரிக்கும்.

என் விழிகள்
நூறு கடிதங்கள் போட்டும்
ஏனோ இன்னும்
பதிலைக் காணோம்

சுவாலை விட்டெரியும்
பெரும் நெருப்பாகி விட்டது
என் காதல்....
அதில் நீ
குளிர் காயப் போவது
எப்போது?

இன்றும் என் நினைவில் அவன்

ஏமாற்றத்தைச்
சந்திக்க விரும்பாத
இன்னல்களை
சகிக்கத் தெரியாத
அந்த டீன்ஏஜ் பருவத்திலே..
என் உள்ளத்தில்
காதலை விதைத்தவன்
அவன்.

இன்பத்தை
உணரத் துடிக்கும்
இனிமையை
நுகரத் துடிக்கும்
இளமையின் வாசலை
தட்டியவன் அவன்.

பசுமையான நினைவுகளை
ஏந்தி வந்து
வசந்த காலத் தென்றலாக
என் இதயமெங்கும்
வியாபித்தவன்
அவன்.

காலத்தால்
அழிக்க முடியாத
மீண்டும்
திரும்பி வர முடியாத
மனதில்
பட்டாம்பூச்சி சிறகடித்த
அந்த........
கல்லூரிக் காலத்து
காதலன் அவன்!

காதல் வளர்பிறை

இதயத்தை கவர்ந்தவனே!
உனை பற்றிய எண்ணம்
என் நெஞ்சமதில்
வளர்பிறையாய்

நித்திரை இன்றி
கழிகின்றன
பல இரவுகள்
உன் நினைவாய்

உனை கண்ட
முதல் நாளே இதயத்தை
தந்து விட்டேன்....

நீயின்றி நானில்லை
என்ற நிலைக்கு
வந்து விட்டேன்

இனியாவது
என் காதலை நீ
புரிந்து கொள்வாயா...
அல்லது....
தொடர்ந்து
உன் புறக்கணிப்பால்
பிரிந்து கொல்வாயா

எனை தீண்டும் மௌன முட்கள்.....

அமரத்துவம் பெற்று விட்ட
உன் மீதான காதல்.....
எனை இறக்கச் செய்து
உயிர் தருகிறது

காதலின் வாசமும்-இந்த
காரிகையின் நேசமும்-இக்
கவி வரிகளிலே
காண்பாய்

கருணையை வேண்டாதவன்
நீ என்ற படியால்...
காதலின் அவஸ்தை
உனக்கு தெரியாது தான்

குற்றமிழைத்தவள்
நானே தான்.......
உற்ற பெரும் காதலினால்
இதயத்தை தொலைத்தேனே

உடைந்த கண்ணாடியாய் மாறி
உள்ளத்தை கீறிச் செல்கிறது..
தெரியாமல் நீ
வீசிச் செல்லும் பார்வைகள்

ஏக்கத்தோடு மலர்ந்து
உனக்காக காத்திருக்க...
நீயோ மௌன முட்களால்
குத்தி வதைப்பது ஏன்

பொல்லாத காதல்

கல்லால்
இதயம் செதுக்கப்பட்ட
உனக்கு......- என்
காதல் துயர் விளங்குமா

என் உள்ளம்
ஓவென கதறி அழுகிறது..
கண்ணீர் துளியோ
இரத்தமாய் விழுகிறது

சம்மதம் சொல்லாமல்
கொல்லும் காதல்
பொல்லாதது...
அது
துயரங்களில்
ஈடு இணை இல்லாதது

உனை மனசில் நிரப்பி
காதல் சொல்லும் சுதந்திரத்தை
விட்டு வைத்தேன்...

ஆசை நாயகனே
உன்; கை பட ஏங்கும்
இக் காதல் ஓவியம்
உன் கண்களுக்கு
புலப்படவே இல்லையா?.

நிலவே உனக்காக

ஒரு முறை திரும்பிப்
பார்த்தேன் என்று....
ஓராயிரம் முறை
மகிழ்வடைபவளே

மறைந்திருந்து நான்
நீ மறையும் வரை
பார்ப்பது...
உனக்கெங்கே
தெரியப் போகிறது

கழிந்து போகிற
ஒவ்வொரு நாளிலும்
சில|ரின் கண்வீச்சுகள் கூட
உனை
தாக்கிடக் கூடாதென்று
இதயம் புண்ணாகிக் கொண்டிருப்பவள்
நான்

நீ நல்லபடியாய் கற்கவும்
உன் கற்பனைகளை
கவிதையாய் விற்கவும்
ஆசை கொண்டிருப்பது ஒன்றும்
பொய்யல்லவே

தாயாய் நானிருந்து
தயவாய் பார்ப்பது.....
கைமாறு எதிர்பார்த்தென்று
கனவிலும் எண்ணாதே

படிக்க நீ வந்த நோக்கம்
தடைகளின்றி நிறைவு பெற
ஊக்கமாய் நானிருப்பேன்.....
என் தூக்கத்திலும் துணையிருப்பேன்!

உதய சூரியனே!

இதயத்தில் கலந்தவனே
இன்னமும் உனக்காய்
மதிமயங்கித் தவிக்கிறேன்.....

பொய் நாடகம் என்றுணர்ந்தும்
உள்ளுக்குள் தகிக்கிறேன்.

மனசில் பதிந்த உனை
மறக்க மறுக்குது இதயம்...
நீ
நினைத்துக் கொண்டிருக்கிறாயா
அது
தாங்கிக் கொள்ளும் என்று எதையும்

எனை பற்றிய ஞாபகங்கள்
என்று என்னில் விதையும்
அன்று நான் காண்பேன்
என் வாழ்வில் உதயம

தவிக்கும் பூவிதழ்

உனக்காக என் இதயம்
தினம் தோறும் தவிக்கிறது
உள்ளம் தான் அதனாலே
வெட்கம் விட்டு உரைக்கிறது

உன்னை தினம் எண்ணியே
என் வாலிபம் கழிகிறது
நீ காட்டும் அலட்சியத்தால்
உயிர் கசிந்து வழிகிறது



உன் பூமுகம் காணாவிடில்
பூக்களின் இதழ் கூட தவிக்கிறது..
பனித்துளி போல் என் விழிகள்
கண்ணீரை உதிர்க்கிறது!