Saturday, August 7, 2010

மறையாத கவிதை!





மரணித்து விட்டதாக
மனதைக்
கொன்று விடும் படியாக
செய்திகள் வந்தன...

தங்கை தங்கை என்று
தயவாய் அழைக்கும்
ஸ்ரீதர் அண்ணா...
சொல்
எங்கு சென்றாய்
எம்மை விட்டுவிட்டு?

காலன் உன்னை
கைது செய்தானா?
எம்மை கதறவிட்டு
அந்தக் காலன் உன்னை
கைது செய்தானா?

ஓவியம்
கேட்க வந்தேன்
உன்னைத் தேடி...
எல்லாவற்றையும்
கொடுத்தாய் நீ
தேடித் தேடி!

கலைத்துறையில் - நீ
படைத்த காவியங்கள்...
என்றும் காலத்தால்
மறையாத ஓவியங்கள்!

பல்கலைத் தென்றல்
என்ற பட்டம் பெற்ற நீ
எம் அனைவர் மனதிலும்
சூறாவளியைத் தந்தது ஏன்
உன் பிரிவால்?

உன் தாயும்
தாய் மாமனும் மட்டுமன்றி
யாவரும்
துடித்துப் போகிறோம்...
இதயம் வெடித்துப் போகிறோம்!

கலைக்காக வாழ்ந்தாய் நீ
கண் போன பின்னும்
சளைக்காது வாழ்ந்தாய் நீ!

நோயுற்ற போது கூட
உன்னைக் காண வராதவர்கள்...
இன்று உன்னை எண்ணி
புலம்பும் சேதிகள்
தெரியுமா உனக்கு?

ஸ்ரீP அண்ணா...
நீ எப்போதுமே
என் மனதில் வாழும்
கவிதை...
என்றும் மறையாத
புதுக் கவிதை!!!



குறிப்பு -
அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் நினைவையொட்டி எழுதப்பட்ட கவிதை.