Monday, November 29, 2010

நிகரற்ற நாயனே!


யா அல்லாஹ்!
அலைகளின் நாதத்திலும்
உன் வல்லமையை
இனிதே காணுகிறேன்!

உள்ளத்தை அமைதிப்படுத்த
திக்ர் ஸலவாத்தை
அருமருந்தாய் அருளியவனே!

பொறுமையைக் கொண்டும்
தொழுகையைக் கொண்டும்
துஆ கேட்க வழி காட்டியவனே!

குயிலின் ராகத்திலும் - உன்
குத்ரத்தின் வலிமை தான்
துல்லியமாய் ஒலிக்கிறது..
உன் அருள் மழையால்
இவ்வுலகம் செழிக்கிறது!

நிகரற்ற நாயனே - உன்
நினைவுகளால் என்
கல்பின் பக்கங்களை
நிதமும் சுத்தமாக்குகிறேன்!

கேளிக்கை விளையாட்டை
குழிதோண்டி புதைக்கின்றேன்..
நபிவழியில் சென்று நானும்
நல்லவற்றை விதைக்கின்றேன்!

நான் பயணிக்க வேண்டியுள்ளேன்
இன்னும் தொலை தூரமும்..
தீயவற்றிலிருந்து
என்னைக் காத்திடு
எல்லா நேரமும்!!!

Sunday, November 28, 2010

புன்னகைப் பூச்சு!


உன்
முகத்துக்கு
முற்போக்காய்
முலாம் பூசாமல்
முழுமனதோடு வருகை தா!

உனது செல்வம்
உனதான அந்தஸ்து
உனக்கு தரப்பட்ட மேடை
உனதே உனதான நாக்கு என்று
உண்மையாய் இல்லாதவற்றையும்
உளறி விடாதே..

வெறும் பேச்சில் மாத்திரம்
நீ உச்சரிக்கிறாய் வேதம்..
நிஜத்தில் புனிதனாயிருக்காத
நீ சுட்டெரிக்கும் பூதம்!

போலியாய்
வாக்குறுதிகளை
அள்ளி வீசி..
இறுதியில்
காலியாய் நிற்காதே
மேனி கூசி!

கோர்வையாய் பலதையும்
பேசி விடாது..
பணிவாய் நடந்திடு
துன்பங்கள் ஏது?

சந்திரனைக் காட்டிக்காட்டி
பொய் கூறியது போதும்..
நீ அரிச்சந்திரனாயிரு
மெய்யாய் இனிமேலும்!!!

இருகரம் ஏந்திடுங்கள்!


ஆன்மாவைக் கறைப்படுத்தி
அழுக்காக வாழ்வதா?
இஹ்லாஸை மறந்திங்கு
இன்பத்தில் வீழ்வதா?

இளைஞரே யுவதிகளே
இறை தியானம் மறக்காதீர்..
இறுதியில் சுவனம் புகும்
இனிய சந்தர்ப்பம் துறக்காதீர்!

அந்தகார இரவினிலே
அழுது துஆ புரிந்திடுங்கள்..
நிலையான வல்லோனின்
நிகரிலா அன்பை அறிந்திடுங்கள்!

ஒற்றுமையாய் கூட்டாக
தொழுகையை
நிறைவேற்றுங்கள்..
முஃமினாய் உங்களை
பறைசாற்றுங்கள்!

சண்டை சச்சரவுகளிலிருந்து
தூர செல்லுங்கள்..
அண்டை அயலாருடனும்
நட்பு கொள்ளுங்கள்!

இஸ்லாத்தின் கிளை பரப்ப
ஈமானின் ஒளி நிரப்ப..
இருகரம் ஏந்திடுங்கள்..
இறை நினைவில்
வாழ்ந்திடுங்கள்!!!


இஹ்லாஸ் - தூய எண்ணம்

Wednesday, November 24, 2010

உயிர் வாழும் உன் சொந்தம்!


உன்னுடனான
அன்பு பற்றி கேட்டால்
உறுதியுடன் உயிர்வாழும்
உன் சொந்தம்
நான் என்பேன்!

உதவியாய் நீ
ஏதும் கேட்டால்
முகம் சுழிக்காமல்
முடிந்ததை செய்து
முகம் மலர்வேன்!

பூங்காவில்
உலா வரும்
பூங்;காற்றைக் கேள்..
உனை சுமக்கும்
என் இதயம் பற்றி
அது சொல்லும்!

ஆறுதல் கூறும்
என் வார்த்தையை
நீ கேட்டால்
மாறுதல் வரும்
உன் வாழ்வில்
புதுப்பொலிவு நோக்கி!

தேறுதல் என்
தேகத்தில் கூட நிகழும்
உன் அன்பு
மாறாதிருந்தால்!!!

விளையும் நினைவுகள்!


தினமும்
என் இதயம்
உன் உருவம் வரைகிறதே...
கணமும்
என் உடம்பு
உருக்குலைந்து போகிறதே!

நிதமும்
உன் நினைவு
இதமாய் இருக்கிறதே...
விடியும் முழு இரவும்
முடிவாய் தொலைகிறதே!

படியும்
உன் நினைவு
வடிவாய் பதிகிறதே...
களையும்
பல கனவு
விளையும் நினைவுகளே!

உயிராய்
உணர்வில் கலந்தவளே..
உள்ளத்தை
அன்பால் நனைத்தவளே..!

கற்பனைகளில்
கவிதைகள் கூறியவளே...
கனவுகளில் என்
கண்களைக் காட்டியவளே!

உணர்வுகளில்
உயிரைத் தேடியவளே..
எனக்கு
புது யுகம் காண
புத்தியும் கூறியவளே!

விரக்தியே வாழ்வாய்
வாழ்வே விரக்தியாய்
இருந்த எனக்கு
வாழ்க்கைக்கோர்
அர்த்தம்
சொல்லிக் கொடுத்தாய்
என் உயிரானவளே..!!!

நினைவிழக்கும் ஆன்மா!


நம் சந்திப்புகள்
சந்தோஷத்தைத் தந்தது
என்னவோ மெய்தான்!

உன் உயர்வுக்கு நானும்
என் உயர்வுக்கு நீயுமாய்
ஏணியமைத்து
வெற்றி காண நினைத்ததும்
மெய்தான்!

கயவர்களின்
கரடுமுரடான வார்த்தையால்
காயப்பட்ட என் இதயம் - உன்
கருணை வார்த்தையாலும்
காரூண்ய செயற்பாட்டாலும்
கட்டியெழும்பியதும் மெய்தான்!

ஆனால்..
திடீரென்று
உதறிவிட்ட
உன் உதாசீனத்தால் - என்
உள்ளத்தை
முள்ளொன்று சதாவும்
தாக்குவதும் மெய்தான்!

என்னை அமைதிப்படுத்தும்
ஒவ்வொரு கணங்களிலும்
என் ஆன்மா
உன் போலிச் சிரிப்புகளால்
நினைவிழப்பதும்
மெய்தான்!!!

Friday, November 12, 2010

ஓர் ஊமையின் பாடல்!


புரிதல்களின்மையின்
ஏக்கத்தோடு
மருண்டு போகிறது
என் இதயப் பறவை..

கணத்துக்குக் கணம்
பணம் பார்த்து
குணம் மாறும்
மானிடர் கண்டு
சுருக்கிக்கொள்கிறது
அது தன் சிறகை!

வேகமாக
மிகவேகமாக
கடந்து செல்லும்
மனிதர்களின்
முகம் பார்த்து
துயரங்கள்
மீள்சுழற்சியாகின்றன..

செயற்கைiயாகிப்போன
புன்னகையைக் கண்டு
தாழ்வுணர்ச்சிகள் நீள்கின்றன!

விரக்தியின்
உச்சப் படியில் நின்று கதறி
சோகமாய் முகாரி இசைக்கிறது
என் இயலாமை!

இறுதியாய்
வெட்கத்தோடும்
ஏமாற்றத்தோடும்
அவமானப்பட்டு
தலைகுனிகிறது
என் மனிதாபிமானம்!!!

சொல்ல மறந்த சேதிகள்!


எல்லோரும் ஏன் என்னை
ஏளனமாய்ப் பார்க்கிறீர்கள்?
செய்வதெல்லாம் செய்துவிட்டு
என்னிடம் ஏன்
கேள்வி கேட்கிறீர்கள்?

பொல்லாத வினைகள் என்னை
சுற்றுகின்றதாலா?
சொல்லாத சுமைகளிங்கே
விடாமல் பற்றுகின்றதாலா?

தேதிகள் தோறும்
நான் சொல்லாத சேதிகள்
தினமும் வதைப்பதாலா?

அந்தரப்பட்டுப்போன
வாழ்வியல் வழிமுறைகளை
நீங்களே சிதைப்பதாலா?

துன்பங்களே.. துயரங்களே..
உங்களுக்கு எத்தனை மு(ந)கங்கள்
என்னை கொடுமைப் படுத்துவதற்காய்?

இனிவரும் காலங்கள்
எனக்கு ஒளி தருமா?
வருடம் புதிதாய் பிறக்கையில்
வழி வருமா?

இத்தனை நாட்களாய்
இல்லை
இப்படியொரு மனத்துடிப்பு...
இப்போதுகளில்
இரவின் கணங்களில்
இதயத்தில் வெடிப்பு!

நிம்மதியற்று உறங்குகிறேன்
பல இரவுகள்...
அத்தனைக்கும் காரணம்
சுயநலமாய் பழகிய
சில உறவுகள்!!!