Thursday, November 17, 2011

முரண்பாடுகள்!


நீ கடலில் முத்தெடுக்க
ஆசைப்படுகிறாய் - ஆனால்
மூச்சடக்க அச்சப்படுகிறாய்!

வெற்றிக் கம்பத்தைத் தொட
நினைக்கிறாய் - ஆனால்
தோல்விகளைத்
தாண்ட மறுக்கிறாய்!

உயரப் பறக்க கனவு
காண்கிறாய் - ஆனால்
இருந்த இடத்திலேயே
இருந்துகொள்கிறாய்!

வெளிச்சத்தை தேட
நினைக்கிறாய் - ஆனால்
இருளைக் கண்டு
அச்சப்படுகிறாய்!

பூப் பாதைகள்
வேண்டும் என்கிறாய் - ஆனால்
கற்களையும் முற்களையும்
கடக்க மறுக்கிறாய்!

இஷ்டம் போல வாழ
ஆசைகொள்கிறாய் - ஆனால்
கஷ்டப்பட்டு உழைக்க
மறுத்துவிடுகிறாய்!

தொழிலதிபராக
கனவு காண்கிறாய்
சிறிய நட்டங்களை
தாங்க பயப்படுகிறாய்!

அதிகாரம் பண்ண
ஆசைப்படுகிறாய் - ஆனால்
கட்டளைகளுக்கு அடிபணிய
மறுக்கிறாய்!

சிம்மாசனத்துக்காய்
பாடுபடுகிறாய் - ஆனால்
வறியோர் துயரைத்
துடைக்க மறுக்கிறாய்!!!

எல்லாம் மாறிப் போச்சு!



அத்தியாவசியப் பொருட்களுக்கெல்லாம்
விலையென்பது மலையாய் ஆச்சு..
போரு முடிந்து காலம் மாறியும்
சோறுக்கு கஷ்டமாச்சு!

கடலையின் விலை கேட்டு
குடலும் தான் நடுங்கிப் போச்சு..
சுடலைக்குப் போகும் வரை
நிம்மதியே தொலைந்து போச்சு!

ஏழையின் உழைப்புக்கு
மதிப்புகள் இல்லாமலாச்சு..
சம்பளத்தைக் கூட்டிக் கேட்டு
வேலையும் தான் பறிபோச்சு!

மனிதர்களின் கைகலப்பு
சாதிகளின் சண்டையாச்சு..
பலரும் அதில் கலந்ததாலே
நம் நாடும் ரெண்டாய்ப் போச்சு!

பொன்னாடையும் பூமாலையும்
மேடைகளில் நிறைஞ்சு போச்சு..
ஆளுக்கு ஆள் மாலை போடும்
காலம் இப்போ மலிஞ்சு போச்சு!

காணி கார் பங்களா
காசும் சீதனம் ஆயாச்சு..
கன்னியர் வாழ்வு அதனால்
கானல் நீராய் போயாச்சு!!!

காலத்தின் ஓலம்!


இருளின் போர்வைக்குள்
சிக்குப்பட்டுப்போன
சூரியனுக்கே
விடிந்தால்
விலாசம் வருது..

போரின் வடுக்களுக்குள்
அகப்பட்டுப் போன
மக்களுக்கு
எப்போது விலாசம் வரும்..?

அழகாய் கனவு காண
ஆசைப்படுகிறார்கள்;..
பாவம்..
நிம்மதியாய்
தூக்கம் வராமல்
அல்லல்படுகிறார்கள்!

வண்ணாத்திப் பூச்சியின்
வண்ணம் காண
தினமும் முனைகிறார்கள்..
ஆனால்..
காலுடைந்த சிட்டுக்குருவியாய்
கிடந்து அழுகிறார்கள்!

யுத்தம் முடிந்த ஈழ நாட்டில்
சத்தமில்லாப் பொழுது புலர்கிறது..
எனினும்
விலைவாசி ஏற்றம் கண்டு
உலைப் பானை காய்ந்து
உலர்கிறது!!!

மனிதமில்லாத மனிதன்!


வாழ்வு கழியும்
ஒவ்வொரு நொடியும்
விஷப் பரீட்சையாய்
தோன்றுகிறது எனக்கு!

தாயே...
என்னைவிட்டு நீ போய்
வருடங்கள் எட்டானது
விளங்குகிறதா உனக்கு?

நான் தவிக்கையிலே
தனியாகிப் போகின்றனர்
தலை தடவ வேண்டிய சொந்தங்கள்!

எனக்கு மாத்திரம்
குற்றம் சொல்லிச் சொhல்லியே
பொறுப்புக்களைத்
தட்டிக்கழிக்கின்றனர்
இந்த பந்தங்கள்!

விரல் தீண்டாத
வீணை எனக்கு
வீண் பழி சுமத்துகிறார்கள்..
விளையாட்டாய்
எண்ணிக்கொண்டு
என் மனசை அழுத்துகிறார்கள்!

தாய் மடியில்
தூங்கிய காலங்கள்
எனக்கு நினைவில் இல்லை..
ஆனால் என்னைத் தேற்ற
என்னருகில் இப்போது
என் தாயே இல்லை!

சிரித்துப்பேச இயலவில்லை..
என் சிந்தை கலைந்து
தவிக்கிறேன் சதாவும்..

பன்னிரண்டு மணி தாண்டியும்
கண்ணிரண்டில் தூக்கமில்லை..
சிறு வயது காலத்தில்
இது போன்ற துக்கமில்லை!

காலமும்
என் அமைதியும்
நிறைய பேசிவிடும்
நான் வாய் திறக்காமலேயே!

உண்மைகள்
உறங்கிப் போனதால்
என் வாய்க்கும் கூட
இப்போதுகளில்
பூட்டுப் போடப்பட்டாயிற்று!

என் சந்தோhஷங்களை
திருடிக்கொண்டு
தென்றலும் பொய்யாய்
வருடிச் செல்கிறது என்னை!!!

பாராமுகம் ஏனோ?

மதியை இழக்கச்செய்து
விதியை மாற்றுகின்ற
வித்தைகளை - மனிதா
நீ விட்டுவிடு!

துணையாய்
அல்லாஹ்வை ஏற்று
இணையில்லா அவன் அருளை
குறைகளின்றி பெற்றுவிடு!

பொடுபோக்குத் தன்மை
களவு பொய்களை
மனிதா - நீ
இன்றே நீ மாற்றிவிடு!

ரஹ்மத் தரும் சட்டங்களை
மனமுவந்து மதித்து
படைத்தவன் திருநாமம்
என்றும் போற்றிவிடு!!!

என்ன வாழ்க்கை..?


வாழ்வின் வட்டம் சகதி நிலை..
வதிவிடமின்றி அகதி நிலை!
வீழ்ந்தனர் முதியோர் இல்லத்தில்
விடிவே இல்லை உள்ளத்தில்!

வாழ்வினைத்தானோ நாங்களெல்லாம்
உயிரை மட்டும் சுமந்தவராய்
பாழ்படும் பூமியில் வாழ்கின்றோம்..
படுதுயர் தன்னில் வீழ்கின்றோம்!

வெறிச்சோடும் வீதிகள் போல்
நிம்மதி இங்கு அழிகிறதே..
வேதனை என்னும் மேடையிலே
எங்கள் வாழ்வு கழிகிறதே..

செழிப்புடன் வாழ்ந்தோர் முகத்திலெல்லாம்
பட்டினித் துயர்தான் படர்கிறதே..
சூழ்ந்தது துன்பம் எமைச்சுற்றி
சுகமது உண்டோ வாழ்க்கையிலே???