Wednesday, January 8, 2014

ஆயுள் கைதி

என் இதயம் எனும்
ஜன்னலினூடே
மின்னலாய் நுழைந்தவனே..

தென்றல் வீசிக் கொண்டிருந்த
என் உள்ளத்தில்
புயலை வீசச் செய்தவனே..

கனவில் நீ வந்து
என் கன்னத்தில்
இட்ட முத்தம்
இன்னும் ஈரலிப்பாகவே
இருக்கிறது தெரியுமா?

உன் மீது
நான் கொண்ட அன்பை
வார்த்தை கொண்டு
வெளிப்படுத்தத் தெரியாமல்
ஊமையாகி நிற்கிறேன்
இப்போது..!

உள்ளத்தில் எழும்
ஓசைகள் கூட
இயற்கையோடு கலந்துவிட்ட
குயிலின் கானம் போல
பயனில்லாமலேயே போய்விட்டது!

உன் பேச்சினாலே
என்னைச் சிறைப்பிடித்தவனே
அதில் ஆயுள் கைதியாய் இருக்கவே
ஆசைப்படுகின்றேன் எப்போதும்!

எனக்குள்
மாற்றங்களைத் தந்துவிட்டு
எதுவும் தெரியாதது போல்
எப்படித்தான் இருக்கின்றாயோ?

நீயில்லாத வாழ்வு
இங்கு கசக்கின்றது..
அதை எண்ணுகையில்தான்
என் மனது கனக்கிறது!!!

சத்தமில்லாத யுத்தம்

சுமாத்ராவில் கருவூலமான
சுனாமியா நீ...
சுதந்திரமாய் இருந்த என்னை
சுக்குநூறாக்கினாய் நீ!

நேர்கோடாய் இருந்த எனை
வானவில்லாய் வளைத்துப் போட்டது நீ..
உதாசீனத்தால் உதறித்தள்ளி
உள்ளத்தை உடைத்துப் போட்டதும் நீ!

உன் பார்வை வாள் பட்டதற்கு
என்னுள் பெரிய காயங்கள்..
அந்த காயத்தினால் வெளுத்தது
போலிப் பாசத்தின் சாயங்கள்!

காதல் மந்திரத்தை கற்றுத் தந்தவனே
இதில் என்ன ஞாயங்கள்..
காதலே தெரியாதிருந்த என்னை
கண்கலங்க வைத்ததில் என்ன மாயங்கள்?

சதாவும் எனக்குள்ளே உன்
எண்ண அலைகளே அடிக்கின்றது..
துடிக்கின்ற இதயம்
இப்போது நன்றாக நடிக்கின்றது!

உனைப் பார்க்கச் சொல்லி
மனசு என்னிடம் அடம்பிடிக்கின்றது
பரவசமாய் இருந்த நெஞ்சம்
உன்னால் பஞ்சாகி வெடிக்கின்றது!!!

மனிதர்கள் பலவிதம்!


பொறாமைதனை நெஞ்சில் ஏற்றி
பொருமிப் பொருமி அலைகிறான்
எருமைபோல் நடந்துகொண்டு
ஏமாறுபவன் இருக்கிறான்!

பேராசையால் மூளைமங்கி
பேந்தவிழிப்பவன் இருக்கிறான்
போராசையினால் போட்டிபோட்டு
பணக்காரனானவன் இருக்கிறான்!

பெண்ணாசை பித்துப் பிடித்த
பெரிய மனிதன் இருக்கிறான்
பொன்னாசையால் விழிகள் பிதுங்கி
பொறாமைப்படுபவன் இருக்கிறான்!

காசு கொடுத்து தீயதுசெய்து
காசினியில் வாழ்பவன் இருக்கிறான்!
மாசு கொண்ட உள்ளத்தாலே
பாசம் பொழிபவன் இருக்கிறான்!

பேனை பிடித்து பெயருக்காக
எழுதும் மனிதன் இருக்கிறான்
ஷபோனில்| பேசி பெண்களையெல்லாம்
ஏமாற்றுபவன் இருக்கிறான்!

வட்டி உண்டு வாழ்க்கையிலே
வயிறு வளர்த்தவன் இருக்கிறான்
முட்டி நிறைய கள்ளு, சாராயம்
காய்ச்சி விற்பவன் இருக்கிறான்!

பக்தி கொண்டு நல்லவனைப்போல்
பணிந்து நடப்பவன் இருக்கிறான்
கத்தி கொண்டு பிறரைமிரட்டி
காசு பறிப்பவன் இருக்கிறான்!

மாடி வீடு, காரு, காசு
தேடித் திரிபவன் இருக்கிறான்
பதவி, அதிகார ஆசை பிடித்து
பல்லு இளிப்பவன் இருக்கிறான்!

கண்ணகி பற்றி கவிதை, கதையென
எழுதிக் குவிப்பவன் இருக்கிறான்
கற்பழித்து பெண்களையே
காமுறுபவன் இருக்கிறான்!

பொய்யை மட்டும் சரியாக
பேசும் மனிதன் இருக்கிறான்
மெய்யை மட்டும் மருந்துக்குக் கூட
உச்சரிக்காதவன் இருக்கிறான்!!!