Wednesday, October 29, 2014

மாற்றமில்லை!

நிலவற்ற
அமைவாசை போன்றே
என் வாழ்க்கை இப்போதும்

விடை தெரியாத விடுகதையாக
பயமுறுத்துகிறது
எதிர்காலம்!

தாயே!
நீயில்லாத இந்த உலகம்
பத்தாண்டுகள் கழிந்தும்
துன்பம் மாறாமல்..
அதுபோன்றே
எனக்குள் துளி சந்தோசமும் நீளாமல்!

மரணத்துள்
சுகமாக நீ தூங்குகின்றாய்
நானோ தினமும்
கண்ணீருக்குள் மூழ்குகின்றேன்!

அரக்கர்கள் வாழும்
இந்த உலத்தில்ல்
இனியும் வாழ
அச்சப்படுகின்றேன்..
இனி நீ போன
பாதைதான் எனக்கும்
மிச்சப்படுகின்றது!

ஒய்யரமாய் நான்
நடந்து போவதாய்
பலரும் எண்ணக்கூடும்
என் கால்களின் நடுக்கத்தை
காணாததால்!

தெரியுமா உனக்கு?
இந்த உலகில் இறைவன் படைத்த
வானம் பூமி கடல் மலை
எதுவும் இன்னும் மாறவில்லை
மாறவேயில்லை
என் வாழ்க்கையைப் போலவே!

Tuesday, August 19, 2014

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் - என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

காயப்பட்ட என் நெஞ்சம்
வேதனை தாங்காமல்
விம்மித் துடிக்கும்!

நித்திரை வராத
நிலவுப் பொழுதுகளில்
கண்கள் மட்டும்
கண்ணீர் வடிக்கும்!

செத்துப் போன என் வாழ்வு
சில சொப்பனங்களால் மாத்திரம்
தினம் நகரும்!

யோசித்து வலிக்கும்
என் உணர்வுகள் - எப்போது
நிம்மதியை உணரும்?

கடந்து போன காலங்கள்
உயிரை உடைத்து
வலிகள் தரும்!
ஆனபோதும் நிச்சயமாய்
ஒருநாள் எனக்கு
வசந்தம் வரும்!!!

Wednesday, January 8, 2014

ஆயுள் கைதி

என் இதயம் எனும்
ஜன்னலினூடே
மின்னலாய் நுழைந்தவனே..

தென்றல் வீசிக் கொண்டிருந்த
என் உள்ளத்தில்
புயலை வீசச் செய்தவனே..

கனவில் நீ வந்து
என் கன்னத்தில்
இட்ட முத்தம்
இன்னும் ஈரலிப்பாகவே
இருக்கிறது தெரியுமா?

உன் மீது
நான் கொண்ட அன்பை
வார்த்தை கொண்டு
வெளிப்படுத்தத் தெரியாமல்
ஊமையாகி நிற்கிறேன்
இப்போது..!

உள்ளத்தில் எழும்
ஓசைகள் கூட
இயற்கையோடு கலந்துவிட்ட
குயிலின் கானம் போல
பயனில்லாமலேயே போய்விட்டது!

உன் பேச்சினாலே
என்னைச் சிறைப்பிடித்தவனே
அதில் ஆயுள் கைதியாய் இருக்கவே
ஆசைப்படுகின்றேன் எப்போதும்!

எனக்குள்
மாற்றங்களைத் தந்துவிட்டு
எதுவும் தெரியாதது போல்
எப்படித்தான் இருக்கின்றாயோ?

நீயில்லாத வாழ்வு
இங்கு கசக்கின்றது..
அதை எண்ணுகையில்தான்
என் மனது கனக்கிறது!!!

சத்தமில்லாத யுத்தம்

சுமாத்ராவில் கருவூலமான
சுனாமியா நீ...
சுதந்திரமாய் இருந்த என்னை
சுக்குநூறாக்கினாய் நீ!

நேர்கோடாய் இருந்த எனை
வானவில்லாய் வளைத்துப் போட்டது நீ..
உதாசீனத்தால் உதறித்தள்ளி
உள்ளத்தை உடைத்துப் போட்டதும் நீ!

உன் பார்வை வாள் பட்டதற்கு
என்னுள் பெரிய காயங்கள்..
அந்த காயத்தினால் வெளுத்தது
போலிப் பாசத்தின் சாயங்கள்!

காதல் மந்திரத்தை கற்றுத் தந்தவனே
இதில் என்ன ஞாயங்கள்..
காதலே தெரியாதிருந்த என்னை
கண்கலங்க வைத்ததில் என்ன மாயங்கள்?

சதாவும் எனக்குள்ளே உன்
எண்ண அலைகளே அடிக்கின்றது..
துடிக்கின்ற இதயம்
இப்போது நன்றாக நடிக்கின்றது!

உனைப் பார்க்கச் சொல்லி
மனசு என்னிடம் அடம்பிடிக்கின்றது
பரவசமாய் இருந்த நெஞ்சம்
உன்னால் பஞ்சாகி வெடிக்கின்றது!!!

மனிதர்கள் பலவிதம்!


பொறாமைதனை நெஞ்சில் ஏற்றி
பொருமிப் பொருமி அலைகிறான்
எருமைபோல் நடந்துகொண்டு
ஏமாறுபவன் இருக்கிறான்!

பேராசையால் மூளைமங்கி
பேந்தவிழிப்பவன் இருக்கிறான்
போராசையினால் போட்டிபோட்டு
பணக்காரனானவன் இருக்கிறான்!

பெண்ணாசை பித்துப் பிடித்த
பெரிய மனிதன் இருக்கிறான்
பொன்னாசையால் விழிகள் பிதுங்கி
பொறாமைப்படுபவன் இருக்கிறான்!

காசு கொடுத்து தீயதுசெய்து
காசினியில் வாழ்பவன் இருக்கிறான்!
மாசு கொண்ட உள்ளத்தாலே
பாசம் பொழிபவன் இருக்கிறான்!

பேனை பிடித்து பெயருக்காக
எழுதும் மனிதன் இருக்கிறான்
ஷபோனில்| பேசி பெண்களையெல்லாம்
ஏமாற்றுபவன் இருக்கிறான்!

வட்டி உண்டு வாழ்க்கையிலே
வயிறு வளர்த்தவன் இருக்கிறான்
முட்டி நிறைய கள்ளு, சாராயம்
காய்ச்சி விற்பவன் இருக்கிறான்!

பக்தி கொண்டு நல்லவனைப்போல்
பணிந்து நடப்பவன் இருக்கிறான்
கத்தி கொண்டு பிறரைமிரட்டி
காசு பறிப்பவன் இருக்கிறான்!

மாடி வீடு, காரு, காசு
தேடித் திரிபவன் இருக்கிறான்
பதவி, அதிகார ஆசை பிடித்து
பல்லு இளிப்பவன் இருக்கிறான்!

கண்ணகி பற்றி கவிதை, கதையென
எழுதிக் குவிப்பவன் இருக்கிறான்
கற்பழித்து பெண்களையே
காமுறுபவன் இருக்கிறான்!

பொய்யை மட்டும் சரியாக
பேசும் மனிதன் இருக்கிறான்
மெய்யை மட்டும் மருந்துக்குக் கூட
உச்சரிக்காதவன் இருக்கிறான்!!!

Monday, May 20, 2013

மே 01!


உரிய ஊதியமின்றி
சுரண்டப்பட்ட உழைப்புக்கு
விடிவு கிடைத்த நாள்!


முதலாளிமாருக்கு
அடிமைகளாயிருந்த
வாழ்க்கைக்கு
முடிவு கிடைத்த நாள்!


தொழிலாளர்களின்
உரிமையை
வென்றெடுத்த நாள்!


வியர்வைக்கு
விலை குறிக்கப்பட்ட நாள்!


வறுமையின் வேர்களைப் பிடுங்க
முயற்சிப்பவர்களின் நாள்!!!

Wednesday, November 21, 2012

உண்மை அறிந்தவள்!


வெயிலில் எரிகிறாளா
குளிரில் உறைகிறாளா
உணவு உண்டாளா
உறக்கம் தொலைத்தாளா
என்ன செய்து கொண்ருப்பாள்?

கைச்சேதப்பட்டு இப்படி ஆனாளா
அல்லது – பிள்ளைகள்
கைவிட்டதனால் இப்படி ஆனாளா?

பாதையோரம் அவளுக்கு வீடு
உடைந்த குடை
அந்த வீட்டின் கூரை!

வேளாவேளைக்கு உணவு?
படைத்தவனுக்குத் தெரியாதா
படியளக்க?
ஏதோ சாப்பிடுகிறாள்!

ஒரு போத்தல் தண்ணீரை
மூடியில் ஊற்றியூற்றிக் குடிக்கிறாள்..
தண்ணீரின் பெறுமதி
எம் எல்லோரையும் விட
அவளுக்குத் தெரிந்திருக்கிறது!

சொந்தங்கள் இல்லை – அதனால்
சோகங்களும் இல்லை
பொதியொன்றைத் தவிர
அவளிடம் வேறெதுவுமே இல்லை!

உலகம் நிரந்தரமில்லை என்பதை
உலகுக்கு அறிவிக்கும்
ஞானி அவள்!

அதனால்தான்
பேராசை, பொறாமை,
டாம்பீகம், வீண்பெருமை
எல்லாம் மறந்து
அவளது உலகில்
இன்பமாயிருக்கிறாள்!!!

இரத்தம் குடித்த காட்டேறி!

சிட்டாக விளையாடிக் கொண்டிருந்தது
பூக்காத சிறு மொட்டு..
அதனிடம் பூவைக் காட்டி
அழைத்துச் சென்றது
இரத்தம் குடிக்கும் காட்டேறி!

பூ முகத்தைப் பார்த்து
பூவைக்காட்டி மறைவுக்கு
இழுத்துச் சென்றது அந்த மிருகம்..

பின்..
காட்டேறியின் விலங்குணர்வுக்கு
கன்றுக்குட்டி இரையானது!

மிருகங்களைக் கொன்று
இரத்தம் குடித்த அந்த வெறியன்..
இறுதியில்
இரக்கமேயின்றி பாலகியை
பதம்பார்த்துவிட்டு
தலைமறைவானான்!

நரபலி கொடுக்கும்
மூட நம்பிக்கையில்
மூழ்கிப்போன தாயின்
மகனல்லவா இவன்?

அவனுக்கு
நோன்புடன் களைத்திருந்த
சிறுமியின் உயிர்
தேனாக இருந்திருக்குமோ?

அல்லாஹ்வே
அநியாயக் காரர்களுக்கு
நீயே போதுமானவன்
நீதியான தண்டணை வழங்க!!!

குறிப்பு - (2012.08.05 இல்  வெலிகமையில் ஒரு காமுகனால் கொலை செய்யப்பட்ட அப்ரா என்ற சிறுமிக்காக எழுதப்பட்டது)

முகவரி தேடும் மலையகம்!


முகவரி என்பதன்
முதலெழுத்து எங்கே
முகவரி தரப்போகும்
முதல்வனும் எங்கே?

ஆண்டாண்டு காலங்கள்
ஆட்சியினைப் புரிந்தார்கள்
தொழிலாளியான எம்மை
தொலைதூரம் எறிந்தார்கள்?

பச்சையணி தேயிலை மலையில்
இச்சையோடு துரையிருப்பான்
கொழுந்தை பெண்கள் பறித்தாலும்
கொடும்பேச்சால் துளைத்தெடுப்பான்!

எம் பாட்டில் நாமிருந்தோம்
துணையின்றி வாழ்ந்திருந்தோம்
அவர் பாட்டுக்கு ஆடச் சொன்னார்கள்
அவர் மெட்டுக்கு பாடச் சொன்னார்கள்
ஆட்டங்கள் ஓயவில்லை - இன்னும்
எமக்கு ஓய்வும் இல்லை!

சிங்கமாய் கர்ஜித்தோம்
சிற்றெரும்பாய் ஆக்கிவிட்டார்கள்
சிட்டுக்களாய் சிறகசைத்தோம்
சிறகிரண்டை உடைத்துப் போட்டார்கள்!

ஒரு கையில் பொட்டலமும்
தலையிலொரு கூடையுமாய்
மறு வேலை உணவுக்காய்
மலைக்கு நாம் புறப்படுவோம்!

கைகட்டி வாய்பொத்தி
கைதியாய் இருக்கின்றோம்
கணக்குப் பிள்ளையின் முன்
கடுகாக சிறுக்கின்றோம்!

கவலைகள் மறப்பதற்கு
கசிப்பொன்றும் மருந்தில்லை
ஆனாலும் அதைவிட்டால்
எம்மவர்க்கு வழியில்லை!

பொருளாதாரச் சுமை
பொறுமையை சோதிக்குது
பணங்காசு குறைஞ்சதால
படிப்பை அது பாதிக்குது!

நெருப்பட்டி குடில்களில்
நெரிசல்கள் தினம் நிகழும்
நித்தம் எம் துயர்கண்டே
நிலவோடு இரவு அழுவும்!

மழைச் சாரல் அடித்தாலும்
வெயில் கொளுத்தி எரித்தாலும்
வாழ்விலொரு மாற்றமில்லை
வழிதெரிய ஏற்றமில்லை!

மலையக மைந்தர்களே
மனசில் இதைப் பதித்திடுங்கள்
இனியாவது நாம் மிளிர
இனிய விதி படைத்திடுங்கள்!

முகவரி என்பதன்
முதலெழுத்து ஆகிடுங்கள்
முகவரி தந்திடும்
முதல்வனாய் மாறிடுங்கள்!!!

Friday, August 10, 2012

தியாகத் திருநாள்!


ஹஜ்ஜுக்குச் செல்வதனால்
அல்லாஹ்வின் அருள்பெறலாம்
தூதர்கள் வழியதனை
தூயதாய்ச்; செய்திடலாம்!

இப்றாஹீம் நபியவர்தான்
இஸ்லாமிய லட்சியத்தால்
இனிதான புதல்வரையும்
இழந்திடத் துணிந்தனரே!

ஹாஜரா அம்மையும் தான்
அராபியப் பாலையிலே
வல்லவன் கட்டளையை
வாஞ்சையுடன் செய்தனரே!

சிறுகுழந்தை இஸ்மாயிலும்
சீர்குலைந்த இப்லீஸின்
சூழ்ச்சியை உணர்ந்துகொண்டு
உயிர்விட விரும்பினரே!

உடற்பலம் கரைந்தாலும்
உயிர்விட்டுப் பிரிந்தாலும்
கஃபாவைக் காணும் ஆவல்
மக்களை ஆள்கிறதே!

ஆட்டைப் பலிகொடுத்த
நிகழ்வதை நினைவுகொள்ள
குர்பான் வழக்கம் தான்
இன்றுவரை தொடர்கிறதே!!!

Thursday, July 19, 2012

ஓலைக் குடிசையும் பாதி நிலவும்!







வாழ்க்கையை மாற்றிட்டு
எமைச் சூழ்ந்த வறுமை - என்றும்
எம் வானில் விடியாத கருமை!
யாரென்ன சொன்னாலும்
எவரென்ன செய்தாலும்
மறக்காமல் வாழ்கிறோம் 
நாளை வரும் மறுமை!

உடைந்து தொங்குது
என் குடிசைக்கூரை - வார்த்தோமே
வீடு பணம் சுனாமிக்குத் தாரை!
பொல்லாத கஷ்டங்கள்
பல வந்த போதும்
அல்லாஹ்வைத்தவிர
நம்பினோம் யாரை?

அந்நாளில் என்னிடம்
எத்தனை காரு - இன்றெல்லாம்
எனைச்சுற்றிக் கஷ்டம் தான் பாரு!
பஞ்சம் தான் வந்தாலும்
கொஞ்சம் தான் தின்றாலும்
மாறிட்டு வந்தோமே
ஊர்விட்டு ஊரு!

அன்றவர்கள் எனைப் பார்த்து
பணம் பண்ணக் கற்க -
இன்றவர்கள் முன் வேலைக்காய்
கைகட்டி நிற்க - மதியாமல் என்னிடம்
லஞ்சம் தான் கேட்டு
நின்றவர் எல்லோர்முன்
என் மானம் விற்க!

படிக்கின்ற புள்ளைகள்
பசியால தவிக்க - என்னால
முடியல்ல இனிமேலும் சகிக்க
எங்கிட்ட கடன்கேட்ட 
அத்தனைப்பேரும்
நான் கேட்டுப் போனதும்
வந்தாங்க மிதிக்க!

உறவினர் மீதான உறவைத்
துறந்து - அவர்களின் சந்தோஷம்
துக்கம் மறந்து
பணக்காரருக்கும் 
அந்தஸ்துள்ளோருக்கும்
தானம் செய்தலா
உண்மை விருந்து!

வெளியூரு போறேன்னு
நான் போன போது
சம்பளம் தராமல்
படுத்தினான் பாடு!
நான் செய்த பாவம் தான்
ஏதென்று அறியேன்
எந்நாளும் சூழுது
என்னைத்தான் தீது!

துன்பங்கள் வந்தால்
எங்கே நாம் ஓட..
விதியின் விளையாட்டில் 
மனசெல்லாம் வாட!
படச்ச றப்பு தான்
எங்கள என்றும் 
காப்பாத்த வேணும்
வேறென்ன பாட?

பாவங்கள் முழுசாக
எம் நெஞ்சில் நீக்கம்
அல்லாஹ்வின் ரஹ்மத்து 
உள்ளத்தில் தேக்கம்!
தொழுகையும் நோன்பும்
ஸக்காத்தும் செய்ய
வரவேண்டும் இதயத்தில்
உற்சாகம் ஊக்கம்!

குர்ஆனின் ஓசை
பலமாய் ஓங்க - பலாய் முஸீபத்
முழுசாய் நீங்க..
பள்ளிக்குச்சென்று
ஒன்றாகக் கூடி 
ஓதிடுவோமே நன்றாக நாங்க!

ஓலைக்குடிசையில்
ஏழையின் சீவியம் -
இரவினில் கூரையில்
பால் நிலா ஓவியம்!
நாள் முழுதும் காய்ந்தாலும்
பல காலம் மாய்ந்தாலும்
சோகமாய்த் தொடருது 
துன்பத்தின் காவியம்!

செல்வமாய் வாழ்ந்தது தான்
எந்தன் மடமை -
இஸ்லாத்தைத் தவிர
இன்றில்லை உடமை!
தீமைகள் தவிர்த்து
தீன் வழி நடந்து
வாழவேண்டியது 
அடியேனின் கடமை!!!

Thursday, June 28, 2012

வசந்த வாசல்!


எல்லாம் விதி
என்று பழகிப்போன
என் வாழ்க்கை
ஏமாற்றங்களால்
நிறைந்திருந்தது!

துன்பங்களின் இறுதி அத்தியாயம்
முடியும் வரை காத்திருக்கிறேன்..
இனி மகிழ்ச்சி தொடங்கும்
என்ற நம்பிக்கையில்!

துயரங்களால்
துரத்தப்பட்ட என் வாழ்வு
இனி பூக்களால்
அலங்கரிக்கப்படும்!

எல்லோரும்
இராமர்கள்தானே..
தத்தமது இராவணக் குணங்கள்
அம்பலமாகும் வரை

ஆதலால்

குற்றம் சொல்லியே
பழகிப்போன
சுற்றத்தாரும் இனிமேல்
என்னைத் தேடி வருவார்கள்!

என்
கண்ணீரைத் துடைத்தெறிந்து
பன்னீரை ஏந்தியிருக்கிறேன்..

வசந்த வாசலில்
எனக்கான தென்றல்
வீசிக்கொண்டிருக்கிறது!!!

பொய்மை!


என் ஏணியாக நீயும்
உன் ஏணியாக நானும்
பொறாமையின்றி வாழ்ந்த
காலங்கள்
கனவு போல இருக்கிறது!

உன் ஞாபகங்கள்
என்னை
ஆட்டங் காணச் செய்கிறது..
உன் பிரிவு
என்னை தடுமாற வைக்கிறது!

கூட்டத்திலும் தனிமையிலும்
உன் முகம் தெரிகிறது..
பகிர்ந்து கொள்ளவியலா
சோகங்களால்
உடலும் மனதும் எரிகிறது!

புன் சிரிப்பு தொலைந்து
அகம் முழுதும்
புண்களாக வலிக்கிறது..

பிறரின் சிரிப்புக்கு
என் உதடுகள்
போலியாக சிரிக்கிறது!

உதிரும் இலைகளாகவும்
துளிர்க்கும் இலைகளாகவும்
மாறி மாறி - உன்
நினைவுகள் நெருடுகின்றன!

ஒவ்வொரு நாளும்
எதிர்பார்க்கிறேன்
உன் வருகையை.. ஆனால்
அவை தருகின்றன
சதாவும் பொய்மையை!!!

எரிந்த சிறகுகள்!


என் இதயம்
வடிக்கும் கண்ணீரை
உன்னால்
பார்க்க முடியுமா?

தளுதளுக்கும்
என் குரலை
உன்னால்
கேட்க முடியுமா?

நீ அருகேயிருந்தால்
துன்பங்கள் கிட்டவர
அச்சம் கொள்ளும்..

நீ தூரப்போனால்
அவை என்னை
ஆக்கிரமித்துக் கொல்லும்!

என்னைக் குருவி குருவி என்று
கூப்பிடுவாயே..
இப்போது இந்தக் குருவியின்
சிறகுகள் எரிந்து
பொசுங்கிவிட்டன!

உன்னுடன் என்னால்
உயரப் பறக்க முடியவில்லை..
உனை மறந்து
தனியாய் பறக்கவும் இயலவில்லை!

பழி சொல்லும் இந்த உலகில்
வாழவே அச்சப்படுகிறேன்..
எனக்கொரு
வழி சொல்லிவிடு!
வதைத்தது போதும்
வந்தென்னை
வாழ வைத்துவிடு!!!

தோல்வி!


மனிதனைப்
புடம்போட்டு
புதிதாக
பிறக்க வைக்கிறாய்!

நீதான் எம் ஆசிரியன்..
வாழ்க்கைப் பாடங்களை
கற்றுத் தருகிறாய்!

நீ முதலில் தருவது
கவலைகளையல்ல
சந்தோஷத்தின்
படிக்கற்களை!

விழுந்து எழுந்தால்தானே
வெற்றி கிடைக்கும்?
தானாய் வந்தால் அது
மதிப்பை இழக்கும்!

கண்ணீரில் மூழ்கியவன்தான்
சிரிப்பின் தாற்பரியத்தை
அறிந்தவன்!

போராட்டம்தான்
இன்ப நீரூற்றின்
அத்திவாரம்!!!

தொடரும் தொல்லைகள்!


வலை வீசி கஷ்டப்பட்டும்
வருமானத்தைக் காணோம்...
விலைவாசி ஏற்றத்தால் நாம்
வழியிழந்து போனோம்!

எங்கள் அடுப்புக்கள்தான்
எரியவில்லை - ஆனால்
வயிறெரிகிறது
பசியாலும், ஆத்திரத்தாலும்!

கவலைப் படாதீர்கள்
என்று சொல்ல பலருண்டு - எனினும்
வழிவகையைக்
காட்டித் தருவோர் எவருண்டு?

இருட்டில் நிகழும் திருட்டுக்கள்
ஒழிக்கப்படுகின்றன..
பகலில் நிகழும் திருட்டுக்கள்
அழிக்கப்படுகின்றன!

இரத்தத்தை உறிஞ்சுவது
அட்டைகள் மாத்திரமல்ல
அட்டையர்களாய்
பலரிருக்கின்றனர்!

நாங்கள் மனிதர்கள்
தோளேறி சவாரி செய்ய
கழுதைகளல்லர்!

சுனாமி
கிறீஸ் மனிதன்
எதுவும் தேவையில்லை..
எமை வீழ்த்த இந்த
விலைவாசி போதும்!!!

இரு பக்கம்! அல்லது முரண்!


வேதனையின் வலியால்
துடிக்கிறாயா?
கலங்காதே.. நிச்சயமாய்
உனக்கொரு வழி பிறக்கும்!

கவலைகளை உன்னுடன்
காவிச் செல்லாதே..
அவை உன்
செல்போன் அல்லவே?

சிகரம் தொட நினைக்கும் நீ
சின்ன குறைகளுக்கும்
மனம் தளரலாமா?

பகலும் இரவும்
இல்லையெனில்
நாட்கள் எப்படி நகரும்?

இன்பமும் துன்பமும்
இணைந்ததே மனித வாழ்க்கை..
இது இயற்கையின் நியதி!

ஒளிக்குப் பெறுமதி
இருப்பது போலவே
இருளுக்கும் பெறுமதியுண்டு!

இனிப்பை மாத்திரம்
நீ விரும்பினால்
மாத்திரைகளால்
உன் நோய் சுகமாவதெப்படி?

அஸ்தமனத்துக்குப்
பிறகுதான்
உதயம் என்பதை
மறக்கலாமா?

விதைகளை நட்டால்தானே
விருட்சங்களை
எதிர்பார்க்க முடியும்?

துன்பங்களில் நீ
சிக்கியிருப்பதாய் துவண்டுவிடாதே..
உனக்காக சிம்மாசனம்
காத்திருக்கிறது வெற்றியோடு!

இயற்கையில் இல்லை பிளவு..
இரண்டும் இணைந்ததே வாழ்வு!!!

கவிதைகளோடு மாத்திரம்!


கடல் தாண்டிச் சென்ற
உன் பிரிவு தாளாமல்
நான் சந்தோஷமின்றியிருக்கிறேன்..

உன் அருகில் இருந்தபோது
நிகழ்காலத்தின் நிம்மதி
உணர்ந்திருக்கிறேன்..

உனதான
அன்புப் பறிமாற்றங்களால்
எத்தனை முறை
மகிழ்ச்சியிலாழ்த்தியிருக்கிறாய்!

எனைப் பிரிந்த உன் வாழ்வு
எப்படிக் கழிகிறதோ..
கழிவிரக்கம் இல்லாமல்
காலம்தான் கழிகிறதோ?

கனவோடும் கற்பனையோடும்
காத்திருக்கும் - என்
காலம் பற்றி உன்னிடம்
காற்று சொல்லவில்லையா?

உன் கை கோர்த்து
நான் நடந்த கடற்கரையும்
நான் தனியாயழுவதைக்கண்டு
துயருருகிறதே..

கடல் நுரை..
பறவைக் கூட்டங்கள்..
குயிலின் நாதம்..
எதுவுமே மகிழ்ச்சி தரவில்லை!

உன் காதலோடு
நான் வாழ்வதால்
கவிதைகளோடு மாத்திரம்
கலந்துறவாடுகிறேன்!!!

விரைந்தோடி வா!


இறந்தகாலம் முடிந்திற்று..
நிகழ்காலமும் கழிந்திற்று..
எதிர்காலம் நமக்காக
பன்னீர் தூவி வரவேற்கும்!

என் இளமையின்
பாதங்களில்
உன்னுடைய சுவடுகள்..
கரைதேடும் அலையாக
காதலின் நினைவுகள்!

வாழ்வென்றாலும்
சாவென்றாலும்
உன்னுடனே சேருவேன்..
வாடைக்காற்றை சாட்சியாக்கி
உனக்கிதை நான் கூறுவேன்!

உன் கைகோர்த்து
நடக்கும் சமயங்களில்
கவலைகள் யாவும்
காலடியில் வீழும்!

கற்பனையில் உனை எண்ணி
நானே ரசித்தேன்..
பிடிக்காத பாவற்காயையும்
இனிப்பாக ருசித்தேன்!

அர்த்தராத்திரி தூக்கத்தின்
கனவுகளில் வண்ணங்கள்..
கருவறைக் குழந்தையாய்
தலைகீழாய் எண்ணங்கள்!

என் அகத்தைப் புரிந்த
ஆருயிர் நீ..
என் வாழ்வை பகிரும்
உரிமையும் நீ!

எங்கிருக்கிறாய் எனைவிட்டு
என் மன்னவா..
உனக்காக காத்திருக்கிறேன்
விரைந்தோடி வா!!!

Thursday, June 21, 2012

எதிரொலி!


எதிர்பார்ப்புக்கள் ஏதுமின்றி
நானிருந்தபோது
எனக்கு வைரமாக
நீ கிடைத்தாய்..
வைரத்தின்
பெறுமதி நான் அறிகின்றபோது
என்னைவிட்டுப் பிரிந்தாய்!

பல கேள்விகள் உண்டு
என்னிடம் - அங்கு
விடைகள் உண்டா உன்னிடம்?

நீ
என் நினைவுகளின்
ஆணி வேராகிப் போனதாலா
எண்ணங்கள் யாவும்
உன்னைப் பற்றியே
கிளை விரித்திருக்கின்றன?

காலத்தின் கட்டாயங்களுக்கு
கட்டுப்பட்டு - நீயும்
சிந்தித்துக் கொண்டிருக்கிறாயா
என்னைப் போலவே?

உன்னை மறக்க வேண்டும்
என்ற உண்மையை மட்டும்
அடிக்கடி
நினைத்துக் கொள்கிறேன்..
அங்கும் உன் நினைவுகளே
உந்தப்படுகின்றன!

எனது ஒவ்வொரு
சிறிய வெற்றிக்குமான - உனது
முதலாவது கைதட்டல்
இன்று எனக்கு கேட்கவேயில்லை!

வார்த்தைகளில் வடிக்கவியலா
எனது துன்பங்களை
பெருமூச்சுக்களாய்
மொழிபெயர்த்திருக்கிறேன்..

பாறையில் எதிரொலிக்கும்
என் துயரக்குரல்
என்றோ ஒருநாள்
உனக்குக் கேட்கும்
என்ற நம்பிக்கையில்!!!