Monday, May 24, 2010

கவிதைத்துளிகள் !



லஞ்சம்!

கடமைகளை பணத்துக்காக
காற்றில் பறக்க விடும்
பேய்!

சில மனைவிகள்!

அடிமைத் தனத்திலிருந்து
தன்னை
விடுவித்துக் கொள்ள
முடியாத
அப்பாவிக் கைதிகள்!


வாழ்க்கை!

இன்பங்களை மட்டும்
அனுபவிப்பதற்கான
மலர் படுக்கையல்ல
வாழ்க்கை!


திருமணம்!

இரு மணங்கள்
இணையும்
ஒரு
இனிய பந்தம்!


மனித நேயம்!

எப்போதோ
இருட்டறையில்
பூட்டப்பட்ட
ஒரு பொக்கிஷம்!


அன்பு!

ஆன்ம உறவின்
உருக்கத்தால்
ஊற்றெடுக்கும்
ஓர்
நீரூற்று!


துக்கம்!

சந்தோஷத்துக்கு
குறிபார்த்து
வைக்கப்பட்ட
வேட்டு!


மகிழ்ச்சி!

துயர் மேகத்
திரை கிழித்து
துலங்கும்
தூய வெண்ணிலவு!


மின்னல்!

பூமியின் அவலங்களை
படம் பிடிக்கும்
வானத்தின்
கெமரா!


இருட்டு!

வெளிச்சத்துக்கு
வழங்கப்பட்ட
தூக்குத் தண்டனை!


சுனாமி!

நிம்மதியை பயமாகவும்
வாழ்க்கையை மரணமாகவும் மாற்றிவிpட்ட
ஒரு அராஜக ராஜா!


கவிதைகள்!

கலைஞன் இதயத்தில்
பிறந்த குழந்தைகள்!


பொறாமை!

கெட்டவனின்
சுவாசக் காற்று!


பேனா!

சமூக அவலங்களையும்
சச்சரவுகளையும்
சம்காரப்படுத்தும்
சக்தி மிக்க
ஆயுதம்!



பெருமூச்சு!

துக்கத்தையும்
துயரத்தையும்
தீச் சுவாலையோடு
வெளிப்படுத்தும்
துருத்தி!


உன் நினைவு!

ஆறாத காயம்
தீராத ரணம்
தேறாத தேகம்
நீங்காத நினைவு!


இனிய நிகழ்வுகள்!

மறதியெனும்
இருட்குளத்தில்
மூழ்கிப்போன
வைர வைடூரியங்கள்!


வாழ்க்கை!

பிரச்சனைகளும்
போராட்டமும
சந்தோஷமும்
சங்கடமும் நிறைந்த
கதம்ப மாலை!


பனித்துளி!

இரவின்
பிரிவுத் துயர் தாளாமல்
நிலாப் பெண்ணாள் வடிக்கும்
கண்ணீர்!


படுக்கை!

பணக்காரனுக்கு
பஞ்சு மெத்தை!
ஏழைக்கு
பாய்!
பிச்சைக் காரனுக்கு
தெரு!


செருப்பு!

நல்லவன் யார்
கெட்வன் யார்
என்று தெரியாமல்
தூக்கிக் கொண்டிருக்கும்
சுமை தாங்கி!



அவன் விழிகள்!

என் மனதைச்
சுண்டி இழுக்கும்
தூண்டில் இரை!


நூல்கள்!

பெறுமதி
கணிக்க முடியாத
சொத்து!


தலையணை!

சோகத்தில் சுகமளித்து
சயணிக்கச் செய்யும்
சிறந்த தாய்மடி!


மணிக்கூடு!

நேரத்தின் முகம்
பார்க்கும்
கண்ணாடி!


அநுபவம்!

பிரச்சினைகள்
கற்றுத் தந்த
பாடம்;!


காதல்!

அழகான
வானவில்!

Sunday, May 23, 2010

நிலா!



நான் போனேன்
என்னுடனே
வந்தது!

காதல் !




பருவ காலத்தின்
துணையின்றி
மலர்ந்து மணம் பரப்பும்
ஒரு பூ!

ஊசலாடும் உள்ளுணர்வுகள் !



என் இதயத்தை திருடிய
என்னுயிர் காதலியே!
என் இதயத் தவிப்பை
நீ அறிவாயா?
உள்ளத் துடிப்பை
உணர்வாயா?

உன்னால்
உவகைப் பூ பூத்து
உள்ளத்தில் கிளுகிளுப்பு!

ஊற்றெடுக்கும்
உணர்ச்சிப் பெருக்கால்
உடலெங்கும் சிலுசிலுப்பு!

என்னையும் மீறி
எல்லையில்லா
ஆசைகள்
எகிறிப் பாய்கின்றன!

உணவுண்ணும் இடத்திலும்
உறங்கும் தளத்திலும்
உன்னுருவமே
உள்ளுக்குள் ஊசலாடும்!

பாச மலராக
பால் சிந்தும் நிலவாக - என்
பார்வையில் பட்டு - மனதில்
படர்ந்த பூங்கொடியே!
பறந்தோடி வா கிளியே!!!

நட்பு வாழ்வின் நறும் பூ!



தோளுக்கு துணையாகும்
தோழன் - அவன்
துன்பத்தை துடைக்க வரும் பண்
பாளன்!

அன்பைச் சொரிவதிலே
மாரி - அவன்
ஆபத்தில் வழங்கிடுவான்
வாரி!

நெருக்கடியில் கை கொடுக்கும்
நேயன் - அவன்
நேர்மையிலே தோய்ந்து விடும்
தூயன்!

பணம் பார்த்து பழகுவதல்ல
நட்பு - நல்ல
குணம் பார்த்து பழகுவதே
நட்பு!

இன்பத்தில் மட்டும்
இணைவதல்ல நட்பு!
துன்பத்திலும்
தொடர்வதே நட்பு!!!

மௌனக் காளான்கள் !

என் அன்பே!
எனக்குள் நீ
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!

நீ அறிந்தோ
அறியாமலோ
உனக்குள் நான்
உறங்கிக் கொண்டிருக்கிறேன்!

உன்னில் என்னை
விழித்துக் கொள்வதற்கு
உனக்குள் ஆயிரம்
மௌனக்காளான்கள்
குடை விரித்திருக்கின்றன!

என்னவனே!
என் மலர் விழிகள் இரண்டும்
பூத்திருக்கின்றன..
அவை
உன் தரிசனத்துக்காய்
என்றும்
காத்திருக்கின்றன!

உள்ளத்தால்
உன்னை நினைக்கிறேன்..
உன்னவளை நீ
உயிராய் மதிப்பாயா?
அல்லது
காதலித்த பாவம் கருதி
அற்பப் புழுவாய் மிதிப்பாயா???

நினைவலைகள் !

கடந்த காலத்தை நோக்கி
திரும்பிச் செல்கின்றன
என் நினைவலைகள்!

அப்போதெல்லாம்
உன்னைக் கண்டால்
மகிழ்ச்சியின் போதையில்
நனைந்திருக்கும்
என் வதனம்!

அடிக்கடி
என் மனதின்
மேற்பரப்பிற்கு வந்துபோகும்
மறுபடி உன்னை
பார்ப்பேனா என்ற ஏக்கம்!

இமைகளை நான்
மூடிய போதும்
உனது ஒவ்வொரு
அணுவையும்
இதயக் கண்ணாடியில்
படம் பிடித்துக் காட்டும்
என் மனம்!

கடைசியாய் நீ என்னுடன்
பேசி விட்டு போகையில்
அடியெடுத்து வைத்த
ஓசைகள் மட்டும்
இன்னும்
என் இதயத்தில்
ஒலித்துக் கொண்டேயிருக்கிறது!!!

நித்தியவான்!

காற்றுடன்
கலந்து வரும்
கடலலையும்
கடமைப்பட்ட
உன் உள்ளத்தைக் கண்டு
களிப்படைகிறது!

இளமையிலும் சளைப்பின்றி
முதுமையிலும் களைப்பின்றி
நீ
இன்னமும் உழைக்கிறாய்..
சோம்பேறிகளின் உள்ளத்தை
உன் சுறுசுறுப்பால் துளைக்கிறாய்!

நீ
கடந்து வந்த காலங்களைப் பார்த்து..
நட்சத்திரமும்
வியக்குது வேர்த்து!

உழைப்பின்றேல்
தூக்கமும்
துக்கமாய் மாறுகிற
சத்திய கதை கூறும்
நித்தியவான் நீ!!!

உயிர் பிணத்தின் மனம் !

நான் நினைக்கிறேன்
காவியம் படைக்க!
நீ நினைக்கிறாய் அதில்
கறை பூச!

நான் செயலில் காட்டுகிறேன்
மனித நேயத்தை!
நீ கதை அளக்கிறாய்
மானுடம் பற்றி!

நான் விரும்புகிறேன்
எளிமையை!
நீ மூழ்குகிறாய்
ஆடம்பரத்தில்!

நான் மதிக்கிறேன்
அன்பை!
நீ மாறுகிறாய்
அரக்கனாய்!

நான் காப்பாற்றுகிறேன்
வாக்குறுதிகளை!
நீ பறக்க விடுகிறாய்
காற்றில் அதை!

நான் மதிக்கிறேன்
மனிதர்களை!
நீ மதிக்கிறாய்
பணத்தை!

என் கண்ணீர் துளியில்
நீ தெளிக்கிறாய் பன்னீர்!

நீ போடுகிறாய்
இரட்டை வேடம்!
நான் முயற்சிக்கிறேன்
களைக்கவே!!!

என்னைத் தொலைத்து விட்டு...!

நாட்கள் நகர்ந்தன..
தருணங்கள் தகர்ந்தன..
பருவ மாற்றங்களை
பனியும் வெயிலும் பகர்ந்தன..
விண்ணும் மண்ணும்
வெட்ப தட்பம் நுகர்ந்தன!

நான் எண்ணும்
போதெல்லாம்
நீ என் மனமெனும்
மாளிகைக்கு வருகிறாய்!

மலராய் வந்து
வாசம் பரத்துவாயா?
முள்ளாய் வந்து
இதயத்தை உறுத்துவாயா?

ஆதவன் மறைந்து
அந்தி சாய்ந்த போதும்
உன்னைக் காணாமல்
தவித்திற்று என் மனசு!

ஒரு நிமிடமேனும்
உன் பார்வை படாதா என
ஏங்கிற்று என் வயசு!

உனக்காகவே
என் இதயம் பாடும்
மௌன கீதம்
உன் செவிகளில்
ஏன் விழவேயில்லை?

ஒவ்வொரு கணமும்
நான்
உன்னைச் சுமந்ததால்
என்னையே தொலைத்து விட்டேன்!!!

வாழ்வு மிளிரட்டும் !

புயலில் சிக்கிய
இலைகளைப் போல் - நீ
தடுமாற்றம் கொள்கிறாயா?

துக்கத்தின் கண்ணீர்த்துளி
இத்தரை மீது விழக் கூடாது!

உன் நெற்றியில்
வேதனைக் கோடுகளை
வரைந்தால்..
கடந்து செல்லும்
தென்றலும் உனை
தட்டியெழுப்ப மறந்து விடும்!

உறக்கத்தை விட்டு
உற்சாகம் கொள்!
கண்களைத் திறந்து
காரியப்படு!
கவலைகளை உன்
முகத்திலிருந்து
துடைத்தெறி!

சிறகுகள் வலித்து
சோர்வுறும் வரை
விண்மீன்களை நோக்கி
பறந்திட முயலு!

அமைதியான நீர் நிலையில்
துளிர்விடும் தாமரை போல்
உன் அம்சங்கள் ஒளிரட்டும்
உன் வாழ்வு மிளிரட்டும்!!!

அழகான அடையாளம் !

மானிடராய் பிறந்தவர்க்கு
மரணம் ஒரு நாள் நிச்சயம்!
மனம் போன போக்கில் வாழ்ந்து
மனிதா நீ
எதை சாதிக்க லட்சியம்?

கடந்த பாதையை எண்ணி
கவலைப்படுவதை விட்டு
கடக்கப் போகும் பாதையை
இஸ்லாமிய கயிறால் சுற்று!

மரணம்
ஒரு போதும்
உன்னை அநுசரித்து
வராது!

அஃது
எப்போது வரும் என்று
எவருக்கும் தெரியாது!

அந்த நாள் உன்னை
அண்மித்து விட்டதாய் எண்ணி
அச்சப்பட்டுக் கொள்!

அல்லாஹ்வுக்காய்
அனைத்தையும்
அலங்கரித்துக் கொள்!!!

பொய் முகங்கள் !

நீங்கள்
நல்லவர்கள் தாம்!
மிக மிக நல்லவர்கள் தாம்!

அழுக்குண்ணி சிந்தையையும்
அடுத்துக் கெடுக்கும்
அடாவடித் தனத்தையும்
அங்கிக்குள் மறைத்து..

அந்த அரிச்சந்திரனுக்கே
அவ்வப்போது வாய்மை
அரிச்சுவடியை
கற்றுத் தந்தீர்களே
அப்போதும் நல்லவர்கள் தாம்!

கொலை வெறியுணர்
கோர நெறிச் செயலையும்
காவி உடைக்குள்
களவாக மறைத்து விட்டு..

கருணைக் கடலாக
காருண்ணிய மூர்த்த்pயாக
காலுடைந்த ஆட்டுக்காய்
கண்ணீர் வடித்தீர்களே
அப்போதும் நல்லவர்கள் தாம்!

நரித்தனத்தையும்
நயவஞ்சக குணத்தையும்
நாலு பேரறியாமல்
நெஞ்சில் புதைத்து விட்டு..

நாற் சந்தியெல்லாம்
நாத்தெறிக்க
நலிவுறம் பாட்டாளிக்கான
நல்ல தோழனாய்
குரல் தந்தீர்களே
அப்போதும் நல்லவர்கள் தாம்!

ஆமாம்
நல்லவர்கள் தாம்!
மிக மிக நல்லவர்கள் தாம்!!
நாடக வேஷத்தில் மட்டும்!!!

ரணமாகிப் போன

காலம்..
அது விதியின் கைகளில்
வரையறுக்கப்பட்டிருந்தது!

காலச் சக்கரம்
ஓய்வு மறந்து சுற்றியதால்
பகலும் இரவும்
மாறி மாறி கடந்து போயின!

காணாமல்
போய்க் கொண்டிருந்த
என் நிமிடங்களை
எண்ணிப் பார்ப்பதற்கும்..
சுவாசக் காற்றின்
கனத்தை அளந்து பார்ப்பதற்கும்
யாருமிருக்கவில்லை!

யுகங்கள் மட்டும்
வஞ்சகமில்லாமல்
ஒரு மலரைப் போலவே
மலர்ந்தும் உதிர்ந்தும்
போயின சீக்கிரமாய்!

நான் உனக்காக
எத்துணைக்காலம்
காத்திருப்பது என்பது மறந்நு
கரைந்து கொண்டிருக்கிறது
என் இளமையும்!!!

சொல் ஒரு சொல்; !

காதலனே!
காத்திருந்தேன் உனக்காக
காலமெல்லாம்
கடந்து போனது தான் மி;ச்சம்!

பார்த்திருந்தேன்
உன்
தரிசனத்துக்காக
ஏமாற்றம் தான்
பரிசாய் கிடைத்த
எச்சம்!

ஏக்கங்களும் தாகங்களும்
என்னுள் புதைந்து
நொந்து போகிறது மனது!
துளியேனும் புரியாமல்
மரத்திருக்கும்
இதயமா உனது?

கண்ணாளனே!
கருணையுள்ளம் கொண்ட - உன்
காதலியை
காதல் நோயால்
கரைந்து போக வைக்காதே!!!

காதலுக்கோர் அர்ப்பணம் !

நெஞ்சம் மீதில்
மஞ்சங்கொண்ட
இனிய நேசனே..
எழில் வாசனே..
கவி தாசனே!

உனக்காக நான்
உள்ளத்தை அள்ளித் தந்தேன்!
நீயோ
அன்பை கிள்ளித் தந்தாய்!

உயிருக்குயிராய்
உன்னை நேசித்து
ஓயாமல் பூசித்து
உயிரை வளர்த்தேன்!
நீயோ உதாசீனம்
பண்ணுகிறாய் என்னை!

காலங்கள் மாறலாம்
கனவுகளும் மாறலாம்
அன்பே!
என் இதய வானில் நிழலாடும்
உன் எண்ணங்கள் மாறாது!
உயிராக
உணர்வாக அது என்றென்றும்
உறுதியாய் நிலைத்திருக்கும்!

இஃது
என்னையே
உனக்காக அர்ப்ணித்த
காதலுக்கான
சமர்ப்பணம்!!!

மயக்கும் மாங்குயிலே !

என்
இதய வானில்
உதயமான பூரண நிலவு நீ!

காதற் சமுத்திரத்தில்
காலமெல்லாம் நீந்தும்
கயல் விழியும் நீ!

வாழ்க்கைப் பூஞ்சோலையில்
வண்ண மலராக
வாசம் பரப்புவதும் நீ!

மனமெனும் மாளிகையில்
மரகத தோரணங் கட்டி
மஞ்சம் தனில் துயிலும் மயிலும் நீ!

மாந்தோப்பில் அமர்ந்து
மதுர கானம் பொழியும்
மாங்குயிலும் நீ!

வான வீதியில்
வண்ணச் சிறகடித்து
வட்டமிடும்
காதற்சிட்டும் நீ!

மோன நிலையிலும்
மௌன மொழி பேசி
மயக்கும் மங்கையும் நீ!

என்
சுவாசக் காற்றாய்
நான் மீட்டும் ஸ்ருதி லயமாய்
என்னில் கலந்த
எழிலரசியும்
நீ நீ நீ !!!

சதி செய்த ஜாலம் !

அன்பே!
உன்னை நினைக்கையிலே
உள்ளமெல்லாம்
உவகைத் தேன்!

ஊற்றுச்சுனையாக
உள்ளார்ந்த எழுச்சியின்
நினைவாக
உன் பதிவுகளே
உலா வரும் மனதினில்!

என் தேகமெல்லாம்
பரவும் ஒரு வகை உணர்வு
உன் பெயரையே
ஓயாது உச்சரிக்கும்!

நான் போகும் இடமெல்லாம்
நின் நிழலே
நீங்காது என்னை
தொடர்கிறது!

கண்ணில் கலந்து
கருத்து வழி புலர்ந்து
என்னில் குடி கொண்ட
என்னாசைக் காதலனே!

என்னைத் தவிக்க விட்டு
இன்னொருத்தியின் போர்வைக்குள்
உன்னால் மட்டும்
எப்படி உறங்க முடிகிறது?

இது
விதி செய்த கோலமில்லை
உன்
சதி செய்த ஜாலம்!!!

கண்ணீர்க் காவியம் !

எனது விழியோரம் வழியும் கண்ணீர்
கதை சொல்லும்
கவிதை பாடும்
காவியம் படைக்கும்!

எனது இதயம்
உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தும்
இதயக்குமுறல்களை ஓசைப்படுத்தும்
மன வடுக்களை வெளிப்படுத்தும்
துயரங்களின் போது விம்மியழும்!

எனது குரல்
மனித நேயம் பேசும்
உரிமைகளைத் தட்டிக் கேட்கும்
தூங்குபவர்களை விழிக்கச் செய்யும்
ஒடுக்கப்பட்டவனுக்காக ஓலமிடும்
திக்கற்றவனுக்கு பரிந்துரைக்கும்


எனது சிந்தை
எழிலை ரசிக்கும்
தென்றலைத் தாலாட்டும்
அலையுடன் விளையாடும்
நிலவோடு பேசும்
வானில் பறக்கும்!

எனது கருணை
வறியவனுடன் நட்பு கொள்ளும்
ஏழைக்கு உதவும்
மனிதமுள்ள மனிதனை நேசிக்கும்
அட்டூழியம் கண்டு கொதித்தெழும்!

எனது திடம்
உரிமைக்காக போராடும்
இடர்களை மிதிக்கும்
துன்பங்களை விரட்டும்
வரட்டு கௌரவத்தை தகர்க்கும்
மலையையும் புரட்டும்!

எனது செயற்பாடு
அயராது உழைக்கும்
அஞ்சாது பாடுபடும்
முயற்சியுடன் செயல்படும்
வெற்றியைத் தேடும்!!!

காத்திருக்கும் காற்று !

தாயின் பிரிவு
எனை வெளியேற்றியது
வீட்டை விட்டு!
தட்டிப் பறிக்கப்பட்ட எனது
உரிமைகளும்
ஆறாத காயங்களை
தந்த வண்ணமாக!

பட்டினி கிடந்து
பட்டம் வாங்கினேன்
நான்!
புத்தகத்தை கையில்
ஆயுதமாய் ஏந்தினேன்
நான்!

கணக்கீட்டுக் கடலில்
மூழ்கி..
முக்கனிகளாய் மூன்று
நூல்களை வெளியிட்டேன்!
கணக்கிலடங்கா துன்பங்களையும்
அவற்றினூடே பெற்றேன்!

முள்ளிலே படுத்தவள் நான்..
கல்லிலே நடந்தவள் நான்..
கண்ணீராய் கரைகிறது
என் செந்நீர்!

வசந்த வாழ்க்கை - என்
வாழ்வு தேடி
நிச்சயம் வரும் ஒரு நாள்!
அதற்காக காத்திருக்கிறேன்
கனவுகளோடு பூத்திருக்கிறேன்!!!

மௌனித்துப் போன மனம் !

வாயிருந்தும்
வார்த்தையாட முடியாமல்
மௌனியாகி விட்டேன் நான்!

உண்மையில்
ஊமையல்ல நான்!

உருப்படாத சமூக ஒட்டுறவுகளால்
ஓரங்கட்டப்பட்டவள்!

மனித நேயமற்ற
மானிடப் பதர்களால்
எனது
சொத்து சுகம்
சந்தோஷம் இருப்புநிலை
எல்லாமே சூறையாடப்பட்டன!

மௌனப் போராட்டமான
பகீரதப் பிரயத்தனங்கள்
அனைத்தும்
அர்த்தமற்றுப் போயின!

புதிய கனவுகளை
புடம் போட்டு
பூரித்துப் போன எனக்கு
துக்கங்களும்
துயரங்களும்
தாலாட்டு பாடின!

நம்ப வைத்து மோசம்
செய்யும்
நயவஞ்சகரின்
நரித்தனம் புரியாமல் நான்
நிர்க்கதியானேன்!

பசுத்தோல் போர்த்திய புலியாக
பயங்கரத்தை மூடிப்பழகும்
படுபாதகரையே
நான் பாதையெங்கும் காண்கிறேன்!

உடைந்து நொறுங்கிய
என் இதயச் சுவரில் தான்
ஓவியம் தீட்ட
வருகிறார்கள் அவர்கள்!

தட்டிக் கேட்க முடியாமல்
துயரத்தால் வாயடைத்து
மௌனித்துப் போனது மனம்!!!

புயலாடும் பெண்மை !

பெண்ணே!
நீ பாவலர் போற்றும்
மென்மையானவள் தான்!

ஆனால்
அடக்கியொடுக்கி
வாழ நினைக்கும்
ஆடவர் மத்தியில்
அடல் சான்ற
வன்மையானவள்!

பணிவும் பரிவும்
பாவையர்க்கு
அழகானவை தாம்!

ஆனால்
அரிவையர்க்கெதிராக
அநீதி தலையெடுக்கும் போது
பணிந்து போகாமல்
துணிந்து நில்!
திண்மை நெஞ்சோடு
தொடர்நது செல்!

பூங்கொடியே!
நீ மலருக்கு உவமிக்கப்பட்ட
மங்கை தான்!

ஆனால் தீங்கினைக் கண்டால்
முள்ளாகத் தீண்டவும்
தயங்காதே!

மாதரசே!
நீ மந்தமாருதம் தான்!
பெண்மைக்கு ஊறு வந்தால்
புயலாக மாறி விடு!!!

சிறைப்பட்ட நினைவுகள் !

அன்பே!
என் மனதுக்குள்
தினம் தினம்
விருந்து படைக்கிறது
உன் நினைவுகள்!

என் அகமெனும்
வான வெளியில்
ஒளியாக தெரிவது
உன் முகமே!

நீ நடக்கும்
பாதையெல்லாம்
நான் விரிகின்றேன்
மலர்களாய்!
நீ மிதித்து மிதித்துப் போகும்
ஒவ்வொரு கணமும்
வலிக்கிறதே
என் இதயம்!

என் இதயம் பேசுவது கூட
கேட்கவில்லையா
உன் செவிகளுக்கு?

வேதனையால்
என் மனம்
ஊமையாகிப் போகிறது!

துயரம் விஞ்சி
என் உதடுகளும்
தாழிடப்பட்டு விட்டது!

இது வரை உணரப்படாத
உணர்வுகள்..
இதுவரை சிலிர்த்துக் கொள்ளாத
உறவுகள்..
ஜனனிக்கின்றன
என் நெஞ்சில்!

இது தான் காதலென்பதா?
என்றும் உனக்காகவே
வாழ்கிறேன்
நான்!!!

காதல் பத்தினி !

இதயாசனத்தில்
இங்கிதமாய் வீற்றிருக்கும்
இளவரசனே..!

நீ..
உள்ளன்போடு உரையாடி
உயிர் துணைவனாய் உறவாடி
உண்மையான அன்புக்கு
இலக்கணம் வகுத்தாய்!

உனது நடையிலே
ஒழுக்கத்தின் பிரதிமை
ஒளிர்ந்தது தெளிவாய்!

உடுத்தும் உடையிலே
எளிமையும் தூய்மையும்
மிளிர்ந்தது அழகாய்!

பணத்திமிரோடும்
பகல் வேஷத்தோடும் பழகும்
பத்தாம் பசலிகள் போலல்லாமல்
பண்பாக
பலரோடும் பரிவாக
பழகி எனைக் கவர்ந்தாய்!

உன்னை
உள்ளத்தில் இருத்தி
ஓயாமல் பூசித்து வரும்
உத்தமி நான்!

ஆரவாரமில்லாமல்
அடிமனதில்
அமிசடக்கமாய் உறங்கும்
உன் நினைவும் கனவும்
ஒரு காலும் அழியாது அன்பே!

இனியவனே!
இதயங் கவர்ந்தவனே!
இந்தப் பேதையை
இலவு காத்த கிளியாய்
ஆக்கி விடாதே!!! !

நியாயமா சொல் !

நிலவும் வானும் பள்ளி
கொள்ளும் ஓர் அமாவாசை நேரத்தில்
உன் நினைவுகள் துள்ளி வந்து
கொள்ளை இன்பம் தந்து
என் நித்திரையைக் கெடுப்பது
என்ன நியாயம்?

உலவும் தென்றலும்
மலரும் பூக்களும்
மௌன மொழி பேசி
மோக முத்தம் தருகையில்
நீ தேகமெல்லாம் பரந்து
தீராத தாகம் தந்து
தவிக்க விட்டுச் செல்வது
என்ன நியாயம்?

புல்லின் நுனியும் - அதில்
பொலிவுறும் பனியும்
துல்லியமாய் உறவாடி
விரகதாபம் தீர்க்கையில்
நீ - என்
எண்ணத்தில் தேன் வார்த்து
எட்டி எட்டிச் செல்வது
என்ன நியாயம்???

Saturday, May 22, 2010

ஜீவ நதி !

வாழ்க்கைப் பூஞ்சோலையில்
வாச மலராய் மணம் பரப்பும்
வஞ்சிக் கொடியே..
நெஞ்சிலாடும் பொற்கொடியே..!

நீயில்லாத போது
சோலை நிழலும்
சுகம் தரவில்லை..
சுந்தர நிலவும்
இதம் தரவில்லை!

பாளைச் சிரிப்பால்
பணயக் கைதியாய் என்னை
பிணைத்துக் கொண்டவளே!
அன்பால்
அணைத்துக் கொண்டவளே!

தித்திக்கும் தேன் பலாவும்
தெவிட்டாத தௌ;ளமுதும்
உன்னைப் போல்
தீஞ்சுவையைத் தரவில்லை!

கள்ளமில்லா
உள்ளங் கொண்ட காரிகையே!
உணர்வெல்லாம்
கோலமிடும் தூரிகையே!

நான் உன்னில்
சரணடைந்தேன்!
என் காதல் பயிர்க்கு
நீயே ஜீவநதி!!!

ஏற்றுக் கொள் இன்றேல் ஏற்றிக் கொல் !

என்னைச் சுற்றியுள்ள
உலகம் இருண்டது!
துயரங்களை
அடைகாத்துக் கொண்டேன்
என் இதயத்துக்குள்!

கண்களுக்குள்
கண்ணீரும்
கட்டுப்பாடின்றி!

அன்றெல்லாம்
எனக்காக தாலாட்டு பாடிய
என் இனிய தாயே!
யார் செய்த பாவத்தால்
நீ பிரிந்தாய்
எனை தவிக்க விட்டு??

மாத்திரைகளுக்கூடே
உன்
இறுதி யாத்திரை
இருந்ததை
புரிந்தேன்
பிறகு நான்!

வேதனையின் விளிம்பில்
விக்கித்தேன்!
துன்பத்தின் உச்சத்தில்
துக்கித்தேன்!

தாயே!
உனக்காக என் ஆத்மா
ஓயாது அழுகிறது!!!













ஏற்றுக் கொள் இன்றேல் ஏற்றிக் கொல் !

காதலின் இருப்பிடமே..
கவிதையின் தரிப்பிடமே..
காலமெல்லாம்
கனவுக்கன்னியாய் என்னுள்
களிநடனம் புரிகிறாய்!

இது
உனக்கும் எனக்கும்
உயிருள்ளவரை உண்டான
உறவுச் சம்பந்தம்!
உன்னையும் என்னையும்
பிரிக்க முடியாத
தெய்வீக பந்தம்!

மாடி மனை பெரிதல்ல
கோடி பணமும் பெரிதல்ல
கொண்ட கொழுந்தனோடு
கருத்தொருமித்து
காலமெல்லாம் வாழ்வதே
காதல் வாழ்க்கை என்றாய்!

கண்ணே.
கனிந்த காதலன்போடு வாழும்
காலத்தை எதிர்பார்க்கிறேன்!
கடிதில் என்னை ஏற்றுக் கொள்வாய்
இல்லாவிட்டால்
கழுமரத்தில்
ஏற்றிக் கொல்வாய்!!!

வாசி என்னை நேசி !

ஆசை நாயகியே!
என் அடி மனதில்
ஆழமாய் பதிந்து விட்ட
காதல் ஓவியம் நீ!

ஆண்டுகள் பல கடந்தாலும்
அழித்து விட முடியாத
அமர காவியமும் நீயே!

சோலை மலரெழிலாய் - என்
சிந்தையிலே ஆடும்
தோகை மயிலாய்
என்னில் கலந்து நீ
என்றும் உறவாடுகின்றாய்!

ஏனின்னும் புரியாதிருக்கிறாய்
என் நிலையை?
என்னைத் தவிக்க விட
என்னடி என் மேல் கோபம்?
எனை ஒதுக்குவதால்
உனக்கென்னடி லாபம்?

பாடப் புத்தகங்களில் கூட
உன்னைத் தான்
வாசிக்கிறேன்!
பரிவாய் உன்னையே
நேசிக்கிறேன்!
நீ பாராமுகமாய்
எதை யோசிக்கிறாய்???

காதற் சரணாலயம் !

உனைக் கண்ட நான் முதலாய்
கனவிலும் நினைவிலும்
ஓயாத கலவரம்!
உணர்வாயோ நீ
என் நிலவரம்!

நெஞ்சமெல்லாம் நீயே
நிழலாடும் போது..
நிம்மதி என்பது
இனி எனக்கேது?

எங்கும் எதிலும்
உன் நாமம்..
அதை அணுதினம் உச்சரிக்குதே
என் சேமம்!

இதய வானில்
உதயமான இளங்கதிரே..
உன் வரவால் தான்
என் மனக்கோயில் பிரகாசமானது!

ப்ரியமானவனே..
உரித்தோடு உன்னை
வரித்துக் கொண்டேன்!

ஓரக் கண் பார்வையால்
ஒருபோதும் என்னை நீ
ஓரங் கட்டாதே!

உன்னழகைப் பார்த்து
உளமெல்லாம் வேர்த்து
உனக்காகக் கட்டினேன்
ஓர் ஆலயம்!
அதுவே நாமிருவரும்
குடிபுகும் காதற் சரணாலயம்!!!

உயிர் செய் !

அல்லாஹ்வின் அடியானே!
அவனி வாழ்விலே
அப்பழுக்கில்லாமல் வாழ்ந்து
ஆத்மாவை புதுப்பித்துக் கொள்!

ஆஹிரத்தின் அமைவிடத்தை
அதிர்ஷ்டவசமாய்
பதிப்பித்துக் கொள்!

சங்கை நபியாரின்
ஷரீஅத்களை துறந்து
சல்லாபத்தில் சஞ்சரிப்போனுக்கு
சுவனம் என்;பது இமயம்!
போகும் பாதை சீராய் அமைந்தால்
மறுமை இன்பமாய் அமையும்!

பாவ வெள்ளம்
பாய்ந்து வர முன்
இதயத்தில் கட்டிடு
அரண்..
காலம் கடக்க
காத்திருந்தாயானால் நீ
காண்பது என்ன
பலன்?

இறுதியாய் வரும்
இறுதி நாளுக்காய்
இங்கே அறத்தை பயிர் செய்!
நாடு போற்ற நல்லவற்றை
உடனே நீ உயிர் செய்!!!

குறிப்பு - (ஆஹிரா :- மறு உலகம்)
(ஷரீஅத் :- சட்டதிட்டம்)

பாவங்களின் பாதணி !

ஓ மனிதா
உனக்கு மது தான்
இனிதா?

மதுவை மாந்தி - நீ
மயக்கத்தை ஏந்தி
தள்ளாடுவது
போதையில் மட்டுமல்ல
சாவின் விளிம்பிலும் தான்!

குடி..
குடியைக் கெடுத்து
குட்டிச் சுவராக்குவதை
அறிந்த பின்னும்
மறக்க முடிவில்லையென்றால்
இன்னமும்
நீ குடி!

இல்லறம்
கல்லறையாய் மாறும்!
மொட்டை மரமாய் செல்வம்
பட்டுப் போகும்!

எல்லாப் பாவங்களுக்கும்
மதுவே திறப்பு
அதை ஒழிப்பதே
நீ மண்ணில் பிறந்ததற்கு
சிறப்பு!!!

நிலைக்காத நிதர்சனங்கள் !

மரங்களின் மென்மையான
தலையாட்டலால்
மௌனமான
மாலை வேளைக்கு
உயிர் கொடுத்து
உன் மடியில் சாய்ந்து தூங்க
கனவு கண்டதும் உண்மை தான்!

குமுறும் அலைகளை
உள்ளடக்கி
அமைதி காக்கும்
கடல் போலவே - என்
மனது தவித்ததும்
உண்மை தான்!

ஏக்கம் நிரம்பிய
என் விழிகளுக்கு
உன் புன்னகை
உற்சாகம் தரும் என
நம்பியிருந்ததும் உண்மை தான்!

இரவுத் தூக்கத்தின் போது
என் விழியோரக் கண்ணீர்
தலையணையை
நனைத்ததும் உண்மை தான்!

என் அமைதியான
காதல்
உன் உதாசீனத்தால்
ஊமையாகவே மரணித்ததும்
உண்மை தான்!!!

சுனாமி தடங்கள் !

மனிதா!
நீ என் வாசல் வந்து
சுவாசம் கொண்டு
மனங்கொண்டவளோடு
மதன மாளிகை கட்டினாய்!

உன்
ஊடலை
உன்னிப்பாய் கவனித்து
உவகை கொண்டு
உள்ளம் பூரித்தேன் நானும்!

ஆனால்
அற்பனே!
ஆசைப் பெருக்கி;லும்
ஆதாய வேட்கையிலும்
அண்ட சராசரம் படைத்த
ஆண்டவனையே மறந்தாய் நீ!

ஆதலால் தான்
அவனியிலே நானும்
அவதாரம் எடுத்தேன்
சுனாமியாக!!!

புத்தகக் கருவூலம் !

அஞ்ஞான இருளகற்றி
அகத்தைத் திறக்கும்
அறிவுக் கருவ+லம் அது!

மெய்ஞ்ஞானப் பாதையிலே
மானிடரை வழிநடத்தும்
மேதகைமைப் பாலமும் அது!

அகழ்வார்க்கெல்லாம்
அவ்வப்போது
அள்ளி வழங்கும்
அமுதப் பேரூற்று அது!

நிகழ்கால நடப்புக்கும்
எதிர்காலத் தொடுப்புக்கும்
வாஞ்சையுடன் வனப்பளிக்கும்
வளமான நாற்றும் அது!

சட்ட வல்லுனரும்
திட்ட வரைஞரும்
வட்டமிடும் கோப்பு அது!

தொட்ட துறைக்கெல்லாம்
தொடரீடாய் வெளிச்சமிடும்
துல்லியமான கோப்பும் அது!

விஞ்ஞானப் புதுமையும்
வின்னுலகப் பெருமையும்
விளக்கும்
வித்தகக் கோட்டம் அது!

மெஞ்ஞான்றும் விளக்கேற்றி
எல்லார்க்கும் ஒளியூட்டும்
புத்தகத் தோட்டமும் அது!!!

கனவுகளும் அதில் தொலைந்த நானும் !

இப்போதுகளிலெல்லாம்
சின்ன விடயங்களைக் கூட
சிந்தித்து துயருருகிறேன்
நான்!

தனிமையின் கொடுமையில்
தவிக்கிறேன் நித்தம்..
யோசித்தே மூளை காயப்பட்டு
வழியுது துயர் ரத்தம்!

நினைத்ததை அடைய
நானிருந்தேன்
பொறுமையாய்!
வார்த்தைகளும்
தட்டி விட்டு
இன்றிருக்கிறேன்
வெறுமையாய்!

எண்ணங்களாலே
நான்
காலத்தைக் கழித்தேன்..
கனவுகள் கண்டே
என்னை அதில்
தொலைத்தேன்!

எதற்காகவோ
என் இளமை
வீணாய் கழிந்து போச்சு..
இதை காலம்
சொன்ன போது
நின்றது என் மூச்சு!!!

தென்றலே தூது செல் !

சவுந்தரியமான
சோலை மலரே..
என் சுந்தரியின்
நினைவால் நான்
சோபையிழந்து
சோகமாய் இருப்பதை
அந்த
சுந்தரவல்லியிடம்
கூற மாட்டாயோ?

வானில் தவழும்
வண்ண முகிலே..
வட்டக் கருவிழியால் என்னை
வளைத்துக் கொண்ட - அந்த
வஞ்சிக் கொடியாளிடம் - என்
வாட்ட நிலையை
வாயாரச் சொல்லிவிட மாட்டாயோ?

செக்கச் சிவந்திருக்கும்
செந்தூரப் பூவே!
செவ்வரி இதழால் - தினம்
செந்தேன் சிந்துகிற
சிங்கார வல்லியிடம்
சோம்பிய - என்
மன நிலையை
சொல்லி வர மாட்டாயோ?

தேசுலாவும் வீதியிலே - தினம்
தூது செல்லும் தென்றலே...
தேமதுர மொழியாலே - என்னை
தேற்றுகின்ற பைங்கிளியிடம்
தேகமெல்லாம்
தேம்புகின்ற என் நிலையை
தெளிவுபடுத்த மாட்டாயோ???

நிம்மதி தொலைத்(ந்)த நினைவுகள் !

சந்திப்புகள்
சந்தோஷத்தை
தருகின்றன..

பிரிவுகள்
துயரத்தைத்
தருகின்றன..

நானோ
சந்திப்புமின்றி
பிரிவுமின்றி
தொடரும்
ஒரு பயணத்தில்!

உன்னை பற்றியதாக
என் நினைவுகள்
என்றும்
நிலைத்திருக்கும்!

உன்னை என்னால்
ஒரு போதும்
மறக்க முடியவில்லை!

உன்னை மட்டுமே
நினைத்து ஏங்கும்
இந்த அபலையை
ஒரு போதும்
ஒதுக்கி விடாதே!!!

நித்திரையில் சித்திரவதை !

கண்ணின் பார்வையாய்
என் கண்ணில் கலந்துவிட்ட
கண்ணாளா..
நீ என்னை கரம் பிடிக்கும்
நாள் எந்நாளோ?

காலம் கனியும் வரை
கைமுதலும் சேரும் வரை
காத்திருக்க கூறினாய் அன்று..

காலம் கனிந்தும்
கைமுதல் சேர்ந்தும்
காத்திருக்க வைக்கிறாயே
இன்று?

நித்திரையில் வந்து
நித்தம் நித்தம்
சித்திரவதை செய்கிறாய்

வெற்றிக்கு வழி !

துக்கம் கனத்து
துயில்கிறதா?
ஏக்கம் பொங்கி
வழிகிறதா?

பூக்களெல்லாம்
புயலோடு போராடி
முட்களோடு
முட்டி மோதி
அழகு அரசாங்கத்தை
ஆள்கிறதே?

நேரத்தை வெறுமனே
கழித்திடாமல்
விழித்தெழு...
மனசுக்குள்
தைரியம் பெறவே
படைத்தவனைத் தொழு!

உள்ளத்தின் ஆழத்தில்
நம்பிக்கை விதை
நாட்டு..
நீ யாருக்கும்
சளைத்தவன் அல்ல என்று
பூமிக்கே காட்டு!!!

ஆத்மாவின் உறுதி !

இளவேனில் அழகையும்
இயற்கையின் விரிப்பையும்
கண்டு ரசித்த - என்
பூ விழிகள் ரெண்டும்
புயலின் கடுமையையும்
குளிரின் துன்பத்தையும் தவிர
வேறெதையும்
காண்பதில்லை!

அலைகளின்
இனிய ஓசையின்
நாதத்தைக் கேட்ட
என் செவிகள்
நாதியற்றுத் திரியும்
மக்களின் புலம்பலைத் தவிர
வேறெதையும்
கேட்பதிpல்லை!

மனித குலத்தின்
ஆற்றலையும்
பிரபஞ்சத்தின்
அருமையையும்,
இறைவனின் சக்தியையும்
உணர்ந்த பின்பே
என் ஆன்மா
பிரச்சனைகள் தந்த
அனுபவத்தால்
மிகவும் உறுதியடைந்தது!!!

விடிவுக்கான வெளிச்சம் !

ஓ... இளைஞனே!
உன் வீட்டை
இருட்டரங்காக்கி விட்டு
விடியலுக்கு
வெளிச்சம் தேடுகிறாயா?

நீ
தவறி விழும் போதெல்லாம்
தோல்விகள் - உன்
தோளில் தொங்கி
தளர்ச்சியடையச் செய்யும்!

நீ
தன்னம்பிக்கை எனும்
உன் நம்பிக்கையை
தளரவிடாமல்
தற்றுணிவோடு
தடைகளைத்தாண்டு!

உன்னை படைத்த
இறைவன்
உனக்கான வெற்றிக் கதவை
நிச்சயம்
திறப்பான்!!!

சந்திப் ~பூ| !

அன்பே!
உன் மலர் வதனம்
கண்டேன்
என் கண்கள்
குளிர்ந்தன!

உன்
இனிய குரலைக்
கேட்டேன்
என் செவிகள்
இனித்தன!

பல நாள் காத்திருந்து
எதேச்சையாக
சந்தித்து
பிரிய மனமின்றி
விடைபெற்றேன்!

மீண்டும் எப்போது
என் இதய வானில்
வானவில்லாய்
வர்ணம் தீட்டுவாய்???

வெற்றியின் இலக்கு !

வாழ்க்கையில் பயணிக்க
இனி நேரம் கிடையாது..
சுறுசுறுப்பாய் சுவடு பதிக்க
விறுவிறுப்பாய் முன்னேறு!

வெற்றி மேல் வெற்றி
உன் வீடு தேடி வர,
அல்லும் பகலும்
அயராது உழை!

உழைப்பே வெற்றியைத்
தேடி வரும்..
வாழ்வில் முன்னேற்றம்
உன்னை நாடி வரும்!

உணவை மாத்திரம்
ருசிக்காமல்
இயற்கையை ரசித்து
இதயத்தை பலமாக்கு!

நீ சந்திப்பவை யாவும்
சிந்திப்பதற்கு தூண்டுவனவாய்
மாற்றிக் கொள்!

நீ விட்ட குறை
தொட்ட குறை யாவும்
உன்னாலேயே
பூரணப்படுத்தப்பட வேண்டும்!

இந்த இயந்திர
உலகத்தில்
வேகம் மட்டும்
இருந்தால் போதாது
விவேகமும் இருந்தால் தான்
விடிவைக் காணலாம்!

பொறுமையும் நிதானமும்
தான் - உன்
புகழுக்கு
படி அமைக்கும்!

சோதனைகளையும்
வேதனைகளையும்
சாதனைக்கான
சவாலாக்கு!

பிரமிக்க வைக்கும்
உன் செயற்பாடுகள்
எதிரிகளையும்
உதிரிகளாய்
மாற்ற வேண்டும்!

சந்தோஷம் மட்டுமே
உன் மனதில்
சஞ்சாரம்
செய்ய வேண்டும்!

யோசித்து செலவு செய்
யாசிக்கும் தேவை வராது!

வசந்தம் வாசற்படிக்கு
வருமென்று வாய் உராவாமல்
கடினமாக உழைத்து
காலடிக்கு வரவழை!

முயற்சி இருந்தால் போதும்
முன்னிலையில் வெற்றி நிற்கும்..
நம்பிக்கை இருந்தால் போதும்
நாளைய உலகம்
உனக்காய் காத்திருக்கும்!
இத்தனை காலமும்
சுமந்தது போதும்
சுமைகள் இனி
உன்னைச் சுமக்கட்டும்!

உனக்கு இனி
சயனிக்க நேரமில்லை..
சாதனையை நோக்கி
பயணிக்கத் தொடங்கு!

தைரியம்
துணிவு
தன்னம்பிக்கை
உதிரத்தில்
ஊறிவிட வேண்டும்!

இன்பத்தில் நீராட
இதயம் துடிக்கிறதா?
பிரச்சனைகளுடன் போராடு!

மனம் மட்டும்
பலமடைந்தால்
மலையையும்
புரட்டிடலாம்!

சங்கடங்களையும்
சஞ்சலங்களையும்
சவாலாக ஏற்று
சமாளிக்கப் பழகிக்கொள்!

மரியானாவின் அடியில்
மனத்துயரை
ஆயுள் சிறைக் கைதியாய்
அடக்கி வை!

பூச்சியத்துக்கு பின்னுள்ள
இலக்கத்தைப் போல்
வாழ்க்கையை
அர்த்தங்களால்
பெறுமதியாக்கு!

புயல் கூட
போட்டி போட்டு
உன்னிடம் தோற்கட்டும்!

போதனை கேட்டு
இருக்காதே..
சாதனை நிகழ்த்திக்
காட்ட வேண்டும்!

வெற்றியின் விலாசம்
உன் விழியில்
வலம் வர வேண்டும்!

;சில்லறைக்காக
இல்லறம்
அமைக்காதே!

பிஞ்சு மனதில்
நஞ்சு விதைக்காதே!

நீதி கண்டு
பீதி கொள்ளாதிருக்க
நீ
முடிவெடுக்க வேண்டும்!

அறிஞன் கவிஞன்
அனைத்துக்கும் மேலாய்
நீ மனிதனாயிருக்க வேண்டும்!

வெற்றியுடன் நீ
வாழ வேண்டும்..
விடியல்கள் உன்னை
ஆள வேண்டும்!!!

கண்ணீரில் பிறந்த காவியம்; !

நித்திரா தேவி
என்னை ஆலிங்கனம்
செய்ய முன்பு
நான் என் வாழ்வில்
நடந்தேறிய
நிகழ்வுகளை சற்று
அசை போட்டு பார்க்கிறேன்!

நினைவலைகள்
நெஞ்சச் சுவரை இடித்து
நான் முந்தியா?
நீ முந்தியா? என்று
சிறு பிள்ளைத் தனமாய்
போட்டாப் போட்டியுடன்
நிழலாட்டமாய்
நெருடுமே!

நெஞ்சைக்
காயப்;படுத்தி விட்ட
அந்த நிகழ்வுகளின்
கணங்கள்..
நீங்காத வடுவாக
நிலைத்து விட்ட ரணங்கள்!

அந்த நினைவுகள்
அனைத்தும்
அபலையாகிய என்
கண்ணீரில் பிறந்த காவியம்!

அவை காலத்தால் அழியாது
காத்திரமாய் நிலைத்து
விட்ட ஓவியம்!

என் விதியை எண்ணி
இந்த உலகத்தையே
மறந்துவிட நினைக்கிறேன்..
முடியவில்லை!

தேள் கொட்டிய மந்தியாக என்னில்
தினவெடுத்து துள்ளியோடும்
தேவையற்ற நினைவுகளின்
வேதனைகள்!

முன்னேற்றப் பாதையிலே
நான் எடுத்து வைத்த
ஒவ்வொரு அடியும்
சறுக்குமர ஏற்றச்
சவாரியாக
சாணேற முழஞ்சறுக்கி
சலிப்பாகின!

உபாயங்கள் எல்லாம்
அபாயங்களை விளைவித்தன..
உத்திகள் எல்லாம்
புத்தி மாறாட்டத்தி;ல் திளைத்தன!

பெற்றவளோ
தங்கும் நாள்
காலாவதியானவுடன்
தாயகம்
திரும்பி விட்டாள்!

தாபரிக்க வேண்டிய
தமக்கைகள்
உரிமையுடன்
மணமுடித்துப்
போயினர்!

தவிப்பும்
தனிமைப்படுத்தப்பட்ட
தாளாத கொதிப்பும்
என்னை ஒட்டிக் கொண்டன
விடாக் கண்டர்களாய்!

மரத்து விட்ட
மனித மனங்களில்
மருந்துக்குக் கூட
மனிதாபிமானம் இல்லாமலாகியது1

சுயநல வேட்டையிலே
சுழியோடும்
சூதாட்டக்காரர் மலிந்த
சமூகச் சூழலில்
சுமூக உறவையும்
சுற்றாடல் ஓம்பும்
திறனையும்
எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஏக்கத்தில்; பாதி
தூக்கத்தில் பாதியாக
எப்படியோ கழிகிறது
என் வாழ்க்கை!
பொற்பும் பொறுமையும்
மௌனித்துப்போன
நிலையுமே
மனதுக்கு இதமளிக்கின்றன!

வானத்தில் வட்டமிடும்
வண்ணப் பறவையின்
வாழ்க்கை வட்டத்தைப்
பார்க்கிறேன்!

தென்றலின் தாலாட்டில்
தலையசைத்து
தாள லயம் போடும் போது
தென்னை இளங்கீற்றின்
துதிப் பாடலையும் கேட்கிறேன்!

அந்தப் பட்சிகளுக்கும்
அன்றாட அசைவில்
ஆனந்தம் தேடும்
இயற்கை வளங்களுக்கும்
அலாதியான இன்பத்தை
படைத்தவனே
அள்ளி வழங்கியிருக்கிறான்?

அந்த
அற்புத வாழ்க்கையை
ஆசித்தவளாக
அதை எண்ணி
அடிக்கடி ஆண்டவனை
பூசித்தவளாக
அமைதியைத் தேடுகிறேன்!

கண்ணீரில் பிறந்ததோ
காவியம் -
என் கடமையில் நிலைத்ததோ
சீவியம்!!!

ஒலிக்கும் மதுரகானம் !

மன ஊஞ்சலில்
மகிழ்ந்தாடும் மயிலே!
மன்மதன் மாளிகையில்
மதுரகானம் பாடும்
மாந்தோப்புக் குயிலே!

என் நெஞ்சமதில்
எத்தனையோ
எண்ண அலைகள் - அவை
அத்தனையும் நீ பின்னும்
காதல் வலைகள்!

வான் நிலவும்
தேன் சிந்தும் மலரும்
பூம்பொழில் எல்லாமே
உன் எழில் வண்ணமோ?

என்னவனே!
உன் நினைவால்
உருகி வடிகிறேன் நான்!
உன் ஞாபகங்களே
தினமும் என்னில் ஊறும் தேன்!

அன்பே!
நீயின்றி நானில்லை
அறிவாயோ??

நிலவுறங்கும் நள்ளிரவு !

நிலவு தூங்கும் நள்ளிரவில்
என் நிம்மதியைக் கொன்ற
உன் நீங்காத நினைவுகளை
நித்தமும் நான்
குற்றம் சொல்வேன்!

ஆழ்மனசில் தத்தளித்து
ஆறாத ரணமாக
அரித்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகளை
அர்த்தமற்று நான்
சுமந்து கொண்டிருப்பதற்கும்
அத்தான் உனையே
குற்றம் சொல்வேன்!

இலவு காத்த கிளி போல
இம்சைப் படும் என் மனதுடன்
இரக்கமே இல்லாமல் நீ
நடப்பதற்கும்
உன்னைத் தானடா
குற்;றம் சொல்வேன்!

உன் எண்ணங்களை
மட்டும் ஏந்தி
என் உள்ளம்
வெந்து தகிப்பதற்கும்
உன்னையே குற்றம் சொல்வேன்!

கன்னியென் மனதை
கருணை கொண்டு
நோக்கத் தெரியாத
கயவனான உன்னை நான்
நித்தமும்
சத்தமாய்
குற்றம் சொல்வேன்!!!

ஆராதனை !

என்னை
ஆரத்தழுவி
அரவணைத்த அன்புத் தாயே!
நீ பிரிந்து
யாருமற்ற அநாதையாய் என்னை
அழ வைத்தாயே!

துடுப்பிழந்த படகாய்
துயரக் கடலில்
தத்தளிக்கும் என்னை
கரைசேர்ப்பார் யாருண்டு?
தாயன்புக்கு ஈடாக
தரணியிலே ஏதுண்டு?

உன் பிரிவுத் துயர் தாளாமல்
ஓயாது புலம்பும் எனக்கு..
ஒத்தடம் தர
உனை அன்றி
யார் வருவார் துணைக்கு?

உன்னை எண்ணியே
உயிர் சுற்றுது
ஒவ்வொரு திக்கும்!

உனக்காக
என்னுள்ளம்
ஓயாது ப்ரார்த்த்pக்கும்!!!