Saturday, May 22, 2010

வெற்றியின் இலக்கு !

வாழ்க்கையில் பயணிக்க
இனி நேரம் கிடையாது..
சுறுசுறுப்பாய் சுவடு பதிக்க
விறுவிறுப்பாய் முன்னேறு!

வெற்றி மேல் வெற்றி
உன் வீடு தேடி வர,
அல்லும் பகலும்
அயராது உழை!

உழைப்பே வெற்றியைத்
தேடி வரும்..
வாழ்வில் முன்னேற்றம்
உன்னை நாடி வரும்!

உணவை மாத்திரம்
ருசிக்காமல்
இயற்கையை ரசித்து
இதயத்தை பலமாக்கு!

நீ சந்திப்பவை யாவும்
சிந்திப்பதற்கு தூண்டுவனவாய்
மாற்றிக் கொள்!

நீ விட்ட குறை
தொட்ட குறை யாவும்
உன்னாலேயே
பூரணப்படுத்தப்பட வேண்டும்!

இந்த இயந்திர
உலகத்தில்
வேகம் மட்டும்
இருந்தால் போதாது
விவேகமும் இருந்தால் தான்
விடிவைக் காணலாம்!

பொறுமையும் நிதானமும்
தான் - உன்
புகழுக்கு
படி அமைக்கும்!

சோதனைகளையும்
வேதனைகளையும்
சாதனைக்கான
சவாலாக்கு!

பிரமிக்க வைக்கும்
உன் செயற்பாடுகள்
எதிரிகளையும்
உதிரிகளாய்
மாற்ற வேண்டும்!

சந்தோஷம் மட்டுமே
உன் மனதில்
சஞ்சாரம்
செய்ய வேண்டும்!

யோசித்து செலவு செய்
யாசிக்கும் தேவை வராது!

வசந்தம் வாசற்படிக்கு
வருமென்று வாய் உராவாமல்
கடினமாக உழைத்து
காலடிக்கு வரவழை!

முயற்சி இருந்தால் போதும்
முன்னிலையில் வெற்றி நிற்கும்..
நம்பிக்கை இருந்தால் போதும்
நாளைய உலகம்
உனக்காய் காத்திருக்கும்!
இத்தனை காலமும்
சுமந்தது போதும்
சுமைகள் இனி
உன்னைச் சுமக்கட்டும்!

உனக்கு இனி
சயனிக்க நேரமில்லை..
சாதனையை நோக்கி
பயணிக்கத் தொடங்கு!

தைரியம்
துணிவு
தன்னம்பிக்கை
உதிரத்தில்
ஊறிவிட வேண்டும்!

இன்பத்தில் நீராட
இதயம் துடிக்கிறதா?
பிரச்சனைகளுடன் போராடு!

மனம் மட்டும்
பலமடைந்தால்
மலையையும்
புரட்டிடலாம்!

சங்கடங்களையும்
சஞ்சலங்களையும்
சவாலாக ஏற்று
சமாளிக்கப் பழகிக்கொள்!

மரியானாவின் அடியில்
மனத்துயரை
ஆயுள் சிறைக் கைதியாய்
அடக்கி வை!

பூச்சியத்துக்கு பின்னுள்ள
இலக்கத்தைப் போல்
வாழ்க்கையை
அர்த்தங்களால்
பெறுமதியாக்கு!

புயல் கூட
போட்டி போட்டு
உன்னிடம் தோற்கட்டும்!

போதனை கேட்டு
இருக்காதே..
சாதனை நிகழ்த்திக்
காட்ட வேண்டும்!

வெற்றியின் விலாசம்
உன் விழியில்
வலம் வர வேண்டும்!

;சில்லறைக்காக
இல்லறம்
அமைக்காதே!

பிஞ்சு மனதில்
நஞ்சு விதைக்காதே!

நீதி கண்டு
பீதி கொள்ளாதிருக்க
நீ
முடிவெடுக்க வேண்டும்!

அறிஞன் கவிஞன்
அனைத்துக்கும் மேலாய்
நீ மனிதனாயிருக்க வேண்டும்!

வெற்றியுடன் நீ
வாழ வேண்டும்..
விடியல்கள் உன்னை
ஆள வேண்டும்!!!

No comments: