நித்திரா தேவி
என்னை ஆலிங்கனம்
செய்ய முன்பு
நான் என் வாழ்வில்
நடந்தேறிய
நிகழ்வுகளை சற்று
அசை போட்டு பார்க்கிறேன்!
நினைவலைகள்
நெஞ்சச் சுவரை இடித்து
நான் முந்தியா?
நீ முந்தியா? என்று
சிறு பிள்ளைத் தனமாய்
போட்டாப் போட்டியுடன்
நிழலாட்டமாய்
நெருடுமே!
நெஞ்சைக்
காயப்;படுத்தி விட்ட
அந்த நிகழ்வுகளின்
கணங்கள்..
நீங்காத வடுவாக
நிலைத்து விட்ட ரணங்கள்!
அந்த நினைவுகள்
அனைத்தும்
அபலையாகிய என்
கண்ணீரில் பிறந்த காவியம்!
அவை காலத்தால் அழியாது
காத்திரமாய் நிலைத்து
விட்ட ஓவியம்!
என் விதியை எண்ணி
இந்த உலகத்தையே
மறந்துவிட நினைக்கிறேன்..
முடியவில்லை!
தேள் கொட்டிய மந்தியாக என்னில்
தினவெடுத்து துள்ளியோடும்
தேவையற்ற நினைவுகளின்
வேதனைகள்!
முன்னேற்றப் பாதையிலே
நான் எடுத்து வைத்த
ஒவ்வொரு அடியும்
சறுக்குமர ஏற்றச்
சவாரியாக
சாணேற முழஞ்சறுக்கி
சலிப்பாகின!
உபாயங்கள் எல்லாம்
அபாயங்களை விளைவித்தன..
உத்திகள் எல்லாம்
புத்தி மாறாட்டத்தி;ல் திளைத்தன!
பெற்றவளோ
தங்கும் நாள்
காலாவதியானவுடன்
தாயகம்
திரும்பி விட்டாள்!
தாபரிக்க வேண்டிய
தமக்கைகள்
உரிமையுடன்
மணமுடித்துப்
போயினர்!
தவிப்பும்
தனிமைப்படுத்தப்பட்ட
தாளாத கொதிப்பும்
என்னை ஒட்டிக் கொண்டன
விடாக் கண்டர்களாய்!
மரத்து விட்ட
மனித மனங்களில்
மருந்துக்குக் கூட
மனிதாபிமானம் இல்லாமலாகியது1
சுயநல வேட்டையிலே
சுழியோடும்
சூதாட்டக்காரர் மலிந்த
சமூகச் சூழலில்
சுமூக உறவையும்
சுற்றாடல் ஓம்பும்
திறனையும்
எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஏக்கத்தில்; பாதி
தூக்கத்தில் பாதியாக
எப்படியோ கழிகிறது
என் வாழ்க்கை!
பொற்பும் பொறுமையும்
மௌனித்துப்போன
நிலையுமே
மனதுக்கு இதமளிக்கின்றன!
வானத்தில் வட்டமிடும்
வண்ணப் பறவையின்
வாழ்க்கை வட்டத்தைப்
பார்க்கிறேன்!
தென்றலின் தாலாட்டில்
தலையசைத்து
தாள லயம் போடும் போது
தென்னை இளங்கீற்றின்
துதிப் பாடலையும் கேட்கிறேன்!
அந்தப் பட்சிகளுக்கும்
அன்றாட அசைவில்
ஆனந்தம் தேடும்
இயற்கை வளங்களுக்கும்
அலாதியான இன்பத்தை
படைத்தவனே
அள்ளி வழங்கியிருக்கிறான்?
அந்த
அற்புத வாழ்க்கையை
ஆசித்தவளாக
அதை எண்ணி
அடிக்கடி ஆண்டவனை
பூசித்தவளாக
அமைதியைத் தேடுகிறேன்!
கண்ணீரில் பிறந்ததோ
காவியம் -
என் கடமையில் நிலைத்ததோ
சீவியம்!!!
No comments:
Post a Comment