Sunday, May 23, 2010

மௌனித்துப் போன மனம் !

வாயிருந்தும்
வார்த்தையாட முடியாமல்
மௌனியாகி விட்டேன் நான்!

உண்மையில்
ஊமையல்ல நான்!

உருப்படாத சமூக ஒட்டுறவுகளால்
ஓரங்கட்டப்பட்டவள்!

மனித நேயமற்ற
மானிடப் பதர்களால்
எனது
சொத்து சுகம்
சந்தோஷம் இருப்புநிலை
எல்லாமே சூறையாடப்பட்டன!

மௌனப் போராட்டமான
பகீரதப் பிரயத்தனங்கள்
அனைத்தும்
அர்த்தமற்றுப் போயின!

புதிய கனவுகளை
புடம் போட்டு
பூரித்துப் போன எனக்கு
துக்கங்களும்
துயரங்களும்
தாலாட்டு பாடின!

நம்ப வைத்து மோசம்
செய்யும்
நயவஞ்சகரின்
நரித்தனம் புரியாமல் நான்
நிர்க்கதியானேன்!

பசுத்தோல் போர்த்திய புலியாக
பயங்கரத்தை மூடிப்பழகும்
படுபாதகரையே
நான் பாதையெங்கும் காண்கிறேன்!

உடைந்து நொறுங்கிய
என் இதயச் சுவரில் தான்
ஓவியம் தீட்ட
வருகிறார்கள் அவர்கள்!

தட்டிக் கேட்க முடியாமல்
துயரத்தால் வாயடைத்து
மௌனித்துப் போனது மனம்!!!

No comments: