Sunday, February 13, 2011

ஆணவம் கொண்டு வாழ்கிற வாழ்வில்! அல்லது மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்!




அன்றொரு நாளில்
ஏழை என் தோளில்
சேர்த்திருந்தாளே
என் மனைவி..
ஒரு நாள் புசித்தால்
மறு நாள் பசித்தால்
வாய்திறவாளே என் துணைவி!

படிப்பில் அவள் தான்
புலி என்றுணர்ந்து
அறிந்தேன் பிறகு
நானும்தான்..
அதனாலன்றோ
உழைத்ததையெல்லாம்
அவளுக்கு ஈந்தேன்
உண்மை தான்!

கல்வியில் ஆர்வம்
கலைத்திட பயந்தே
அவளை விட்டு
தூர நின்றேன்..
அவளுக்காக எதையெல்லாமோ
இழந்திடவும் நான்
துணிந்து நின்றேன்!

உயர் படிப்பெனக்கு
உற்ற நண்பி தான்
என்று சொல்லியே உருக்குலைந்தாள்..
படிப்பு பரீட்சை
என்று கூறியே
கால் நடையாக
அவள் அலைந்தாள்!

ஒவ்வொரு நாளும்
காலை மாலையென
பாடங்கள் படித்தே
கழித்திட்டாள்..
பரீட்சையில் ஒருநாள்
வெற்றி பெற்றதால்
ஆனந்தத்தில் மகிழ்ந்திட்டாள்!

காலத்தின் கோலம்
மாற்றியதவளை
கோடியாய் அவளும்
உயர்ந்திட்டாள்..
இனி நமக்கெதற்கு
உற்ற துணையென
என்னையும் தான் அவள்
ஒதுக்கி விட்டாள்!

செல்வத்தின் செருக்கில்
செந்தமிழ் மறந்து
ஆங்கிலம் தனையே
உச்சரித்தாள்..
படிக்காதெவரும்
கண்டு பேசினால்
பண்பற்றவரென நச்சரித்தாள்!

அறிவும் ஞானமும்
ஒன்றுசேரவே
அறியாமை மக்களை
அவமதித்தாள்..
ஆணவம் கொண்டு
வாழ்கின்ற வாழ்வில்
ஏழைகளையே
அவள் மிதித்தாள்!

அவளைத் தேடிய
அவளை நாடிய
பாமர மக்களை
அவள் வெறுத்தாள்..
உதவிகள் என்று
கேட்டு நின்றதால்
அவர்கள் வந்தாலே
முகம் கறுத்தாள்!

பதவிகள் உயர்ந்திட
பணமழை தூவிட
அதிகாரத்தில்
அவள் மிதந்தாள்..
ஆடம்பரமாய்
வாழ்வு களித்து
ஆண்டவனையும்
அவள் மறந்தாள்!

இத்தனை செல்வம்
இன்பமாய் இருந்தும்
இறைவனின் நாட்டம்
எதுவென்றால்..
ஆழிப்பேரலை கொடூரமாக
வந்தழித்ததை
தன் விதி என்றாள்!

தள்ளி ஒதுக்கிட்ட
அத்தனைப்பேரும்
அவளுக்கன்பு காட்டிடவே..
கணவன் என்னைக்கதி
என்றெண்ணி
காலங் கடந்து வந்திட்டாள்!

அவளொரு பேதை
என நான் அறிவேன்..
மன்னித்து அவளை
ஏற்றிட்டேன்..
வெட்கம் கொண்டு
கதவிடுக்கினிலே
ஒழிந்து கொண்டு
நாணிற்றாள்!!!