Friday, March 4, 2011

புதிய சட்டங்கள்!




வன்னி நகரில் நடந்த
வன்செயல்களின் கொடூரத்தில்...
இடம்பெயர்ந்தலைந்தேன்
தாங்காத சோகத்தில்!

போர் மேகங்கள் ஒன்று சூழ்ந்து
பொழிந்தன அன்று
குண்டு மழைகள்..
ஈவிரக்கம் துளியுமின்றி
துண்டாடப்பட்டன
அப்பாவிகளின் தலைகள்!

தடுப்புக்காவலில்
தாளாத
சோகம் கண்டவர்கள்
இன்றும் கூட
என்ன ஆனார்களோ?

பதுங்கு குழிக்குள்
பதுங்கியே
பாதி வாழ்க்கை முடிந்தாச்சு..
பயத்துடன் வாழ்ந்த காலம்
இப்போதுகளில் தான் முடிவாச்சு!

புருஷனையும்
பிள்ளைகளையும் இழந்து
இந்த ஏழை படும் பாட்டை
யாரறிவார்...
எங்களைப் போன்றே வாழ்விழந்த
அனைவரும் தான்
இதை அறிவார்...

வேதனை வாழ்வு
வெறுத்த நிலையில்
கூடி வந்தன
மீள்குடியேற்றும் திட்டங்கள்...

சொல்லுங்கள் ஐயா!
எதுவென்றாலும்
என் குடும்பத்தை மீட்டித்தருமா
இந்த புதிய சட்டங்கள்???

வெற்றிகள் உன்னை ஆளட்டும்!


துன்பங்கள்
உன் நெஞ்சில்
முட்டுகின்றதா?
துயரங்கள்
உன் கதவைத்
தட்டுகின்றதா?

இதயமே
இடிந்து போனதாய்
சாய்ந்து விடாதே!
எதுவுமே
கிடைக்காதது போல்
ஓய்ந்து விடாதே!

சமயம் வந்தால்
இமயமும்
உன் காலடியில்...
இறைவனின் நாடினால்
நீ புரளலாம்
கோடிகளில்!

உடைந்து போனால்
உன் மனமும்...
கிடந்து அழுவும்
அனுதினமும்!

தோல்விகள் வெறும்
சம்பவம் தான்...
துணிந்திடு தோழா
வெற்றி சரித்திரம் தான்!

நிலா உனக்கு
பன்னீர் தூவும்...
விண்மீன்கள்
வாழ்த்துரைக்கும்!
கானகப் பூக்கள்
உன்னைக் கண்டு
தலையாட்டும்...
விடியலில் உனக்கு
விலாசம் வரும்!

முயற்சியற்று
நீ வாழ்ந்தால்
பின் எப்படி
சுவர்க்கம் தெரியும்?

தைரியம் கொண்டு
நீயிருந்தால்
இன்பக் கனவுகள்
ஓடி வரும்..
கோழையாக வாழ்ந்திட்டால்
காணாத கவலைகள்
தேடி வரும்!

மானிட வாழ்வு
சிறந்திடத்தான்
அன்பை இறைவன்
படைத்துள்ளான்...
பண்பாய் வாழ்ந்து
வழிகாட்டி
சிறந்திடச் சொல்லி
அவன் சொன்னான்!

போராட்டமான
உன் வாழ்வு
பூந்தோட்டங்களாய் மாறட்டும்...
வெற்றிகள் என்றும்
உன் வாழ்வில்
புதுமையாக ஆளட்டும்!!!