Thursday, November 17, 2011

முரண்பாடுகள்!


நீ கடலில் முத்தெடுக்க
ஆசைப்படுகிறாய் - ஆனால்
மூச்சடக்க அச்சப்படுகிறாய்!

வெற்றிக் கம்பத்தைத் தொட
நினைக்கிறாய் - ஆனால்
தோல்விகளைத்
தாண்ட மறுக்கிறாய்!

உயரப் பறக்க கனவு
காண்கிறாய் - ஆனால்
இருந்த இடத்திலேயே
இருந்துகொள்கிறாய்!

வெளிச்சத்தை தேட
நினைக்கிறாய் - ஆனால்
இருளைக் கண்டு
அச்சப்படுகிறாய்!

பூப் பாதைகள்
வேண்டும் என்கிறாய் - ஆனால்
கற்களையும் முற்களையும்
கடக்க மறுக்கிறாய்!

இஷ்டம் போல வாழ
ஆசைகொள்கிறாய் - ஆனால்
கஷ்டப்பட்டு உழைக்க
மறுத்துவிடுகிறாய்!

தொழிலதிபராக
கனவு காண்கிறாய்
சிறிய நட்டங்களை
தாங்க பயப்படுகிறாய்!

அதிகாரம் பண்ண
ஆசைப்படுகிறாய் - ஆனால்
கட்டளைகளுக்கு அடிபணிய
மறுக்கிறாய்!

சிம்மாசனத்துக்காய்
பாடுபடுகிறாய் - ஆனால்
வறியோர் துயரைத்
துடைக்க மறுக்கிறாய்!!!

எல்லாம் மாறிப் போச்சு!



அத்தியாவசியப் பொருட்களுக்கெல்லாம்
விலையென்பது மலையாய் ஆச்சு..
போரு முடிந்து காலம் மாறியும்
சோறுக்கு கஷ்டமாச்சு!

கடலையின் விலை கேட்டு
குடலும் தான் நடுங்கிப் போச்சு..
சுடலைக்குப் போகும் வரை
நிம்மதியே தொலைந்து போச்சு!

ஏழையின் உழைப்புக்கு
மதிப்புகள் இல்லாமலாச்சு..
சம்பளத்தைக் கூட்டிக் கேட்டு
வேலையும் தான் பறிபோச்சு!

மனிதர்களின் கைகலப்பு
சாதிகளின் சண்டையாச்சு..
பலரும் அதில் கலந்ததாலே
நம் நாடும் ரெண்டாய்ப் போச்சு!

பொன்னாடையும் பூமாலையும்
மேடைகளில் நிறைஞ்சு போச்சு..
ஆளுக்கு ஆள் மாலை போடும்
காலம் இப்போ மலிஞ்சு போச்சு!

காணி கார் பங்களா
காசும் சீதனம் ஆயாச்சு..
கன்னியர் வாழ்வு அதனால்
கானல் நீராய் போயாச்சு!!!

காலத்தின் ஓலம்!


இருளின் போர்வைக்குள்
சிக்குப்பட்டுப்போன
சூரியனுக்கே
விடிந்தால்
விலாசம் வருது..

போரின் வடுக்களுக்குள்
அகப்பட்டுப் போன
மக்களுக்கு
எப்போது விலாசம் வரும்..?

அழகாய் கனவு காண
ஆசைப்படுகிறார்கள்;..
பாவம்..
நிம்மதியாய்
தூக்கம் வராமல்
அல்லல்படுகிறார்கள்!

வண்ணாத்திப் பூச்சியின்
வண்ணம் காண
தினமும் முனைகிறார்கள்..
ஆனால்..
காலுடைந்த சிட்டுக்குருவியாய்
கிடந்து அழுகிறார்கள்!

யுத்தம் முடிந்த ஈழ நாட்டில்
சத்தமில்லாப் பொழுது புலர்கிறது..
எனினும்
விலைவாசி ஏற்றம் கண்டு
உலைப் பானை காய்ந்து
உலர்கிறது!!!

மனிதமில்லாத மனிதன்!


வாழ்வு கழியும்
ஒவ்வொரு நொடியும்
விஷப் பரீட்சையாய்
தோன்றுகிறது எனக்கு!

தாயே...
என்னைவிட்டு நீ போய்
வருடங்கள் எட்டானது
விளங்குகிறதா உனக்கு?

நான் தவிக்கையிலே
தனியாகிப் போகின்றனர்
தலை தடவ வேண்டிய சொந்தங்கள்!

எனக்கு மாத்திரம்
குற்றம் சொல்லிச் சொhல்லியே
பொறுப்புக்களைத்
தட்டிக்கழிக்கின்றனர்
இந்த பந்தங்கள்!

விரல் தீண்டாத
வீணை எனக்கு
வீண் பழி சுமத்துகிறார்கள்..
விளையாட்டாய்
எண்ணிக்கொண்டு
என் மனசை அழுத்துகிறார்கள்!

தாய் மடியில்
தூங்கிய காலங்கள்
எனக்கு நினைவில் இல்லை..
ஆனால் என்னைத் தேற்ற
என்னருகில் இப்போது
என் தாயே இல்லை!

சிரித்துப்பேச இயலவில்லை..
என் சிந்தை கலைந்து
தவிக்கிறேன் சதாவும்..

பன்னிரண்டு மணி தாண்டியும்
கண்ணிரண்டில் தூக்கமில்லை..
சிறு வயது காலத்தில்
இது போன்ற துக்கமில்லை!

காலமும்
என் அமைதியும்
நிறைய பேசிவிடும்
நான் வாய் திறக்காமலேயே!

உண்மைகள்
உறங்கிப் போனதால்
என் வாய்க்கும் கூட
இப்போதுகளில்
பூட்டுப் போடப்பட்டாயிற்று!

என் சந்தோhஷங்களை
திருடிக்கொண்டு
தென்றலும் பொய்யாய்
வருடிச் செல்கிறது என்னை!!!

பாராமுகம் ஏனோ?

மதியை இழக்கச்செய்து
விதியை மாற்றுகின்ற
வித்தைகளை - மனிதா
நீ விட்டுவிடு!

துணையாய்
அல்லாஹ்வை ஏற்று
இணையில்லா அவன் அருளை
குறைகளின்றி பெற்றுவிடு!

பொடுபோக்குத் தன்மை
களவு பொய்களை
மனிதா - நீ
இன்றே நீ மாற்றிவிடு!

ரஹ்மத் தரும் சட்டங்களை
மனமுவந்து மதித்து
படைத்தவன் திருநாமம்
என்றும் போற்றிவிடு!!!

என்ன வாழ்க்கை..?


வாழ்வின் வட்டம் சகதி நிலை..
வதிவிடமின்றி அகதி நிலை!
வீழ்ந்தனர் முதியோர் இல்லத்தில்
விடிவே இல்லை உள்ளத்தில்!

வாழ்வினைத்தானோ நாங்களெல்லாம்
உயிரை மட்டும் சுமந்தவராய்
பாழ்படும் பூமியில் வாழ்கின்றோம்..
படுதுயர் தன்னில் வீழ்கின்றோம்!

வெறிச்சோடும் வீதிகள் போல்
நிம்மதி இங்கு அழிகிறதே..
வேதனை என்னும் மேடையிலே
எங்கள் வாழ்வு கழிகிறதே..

செழிப்புடன் வாழ்ந்தோர் முகத்திலெல்லாம்
பட்டினித் துயர்தான் படர்கிறதே..
சூழ்ந்தது துன்பம் எமைச்சுற்றி
சுகமது உண்டோ வாழ்க்கையிலே???

Tuesday, October 11, 2011

தவிப்பு!


தனிமையின் தவிப்பில்
உன்
தொலைபேசி அழைப்புகள்தான்
எனக்கு துணையாகின..

நீ
காலத்தின்
கட்டளைக்கிணங்க
என்னை விட்டுப்போன பின்
துயரங்களே
என் தோழியாகின..

நிமிஷங்களின் நகர்வுகள்
எனக்குப் புரிந்தது
யுகங்களாகத்தான்!

உன்
குரல் கேட்பதற்காகவே
என் செவிகள்
தவமிருந்ததை
நீ அறிவாயோ என்னவோ?

எனைப் பார்க்க
இன்று வருவாய்..
இல்லையில்லை
நாளை வருவாய்
என்றெண்ணியே
என் வாழ்நாள் கழிகிறது!

நாட்கள் சக்கரம் பூட்டி
ஓடும் என்று பார்த்தால்
அவையோ
ஆமை வேகத்தில் நகர்ந்து
என் உயிரை வதைக்கிறது!

என் குழந்தாய்..
திருமணமுடித்து
வெளிநாடு போன நீ..
இந்தத் தாயைப் பார்க்க வராமல் - என்
இதயத்தைப் பிளந்தாய்!

மகனே..
உனைக் காணவே
உயிரோடிருக்கிறேன்..
ஒரே ஒருமுறை வந்து
பார்த்துவிட்டுப் போ!!!

Sunday, May 22, 2011

காலங்களின் பிடிக்குள்!


இளையவள் என்
வளையல் ஓசையில்
உன் இதயம்
சிக்கிக்கொண்டதாய்
சொன்னாய்!

நான் சிரிப்பதால் தான்
பறவைகள்
இறக்கை விரித்துப் பறப்பதாய்
சொன்னாய்!

அழகிய ரோசாவை
நட்டுவிடக்கூடிய
அழகிய இடம்
என் கன்னக்குழி என்றாய்!

இவற்றைக்கேட்டு
என் உள்ளம்
உன் ஞாபகங்களால்
நிறைந்துவிட்டது!

என் இதயப் பூந்தோட்டத்தில்
பூக்கள் நிறையவே
பூக்கத் தொடங்கின!

உன் அன்பால் கட்டுண்டுதான்
போனேன் நானும்!

எனினும்..
பணத்துக்கு ஆசைப்பட்ட நீ
கொழுத்த சீதனம் தின்று
பங்களா வீட்டின் எசமான்
என்ற பெயரில்
வேலைக்காரனானாய்!!!

சாலையோரத் தேடல்! அல்லது தொலைத்த கவிதை!

அந்த சாலையில் தான்
தொலைத்துவிட்டேன்
என் கவிதைகளை!

இப்போதுகளில் அதை
கண்டுபிடிக்கவே முடியவில்லை..
கண்டு பிடிக்க வழியுமில்லாதபடி
நான் வெகுதூரம் வந்தாயிற்று
அந்த சாலையைவிட்டு!

மனசு கனக்கிறது
இதயம் வெடிக்கிறது
புதுக்கவிதை வாசத்தில் நான்
சிறகடிக்க நினைத்தாலும்
என்னை
கைவிடாதபடி பற்றியிருக்கிறது
மரபுக் கவிதை!

வியர்வையில்
தேடுகிறேன் உயர்வை..
பழைமையிலிருந்துகொண்டு
பார்க்கிறேன் புதுமையை..
ஏனெனில்
கனவுலகில் மிதக்கும்
கற்பனைக் கவிஞன் நான்!

உண்மையில்
அந்த சாலையில் தான்
தொலைத்துவிட்டேன்
என் கவிதைகளை..
யாராவது கண்டுபிடித்தால்
சொல்லி விடுங்கள்!!!

வாழ்க்கை பூங்காற்று!


உலகத்தின்
உறக்கத்தில் உண்மையும்
அமைதியாக
சயனித்துக் கிடக்கிறது!
பொய்யோ..
விழித்துக்கொண்டு
ஆர்ப்பாட்டம் புரிகிறது!

துயரங்கள் எங்கும்
பரவிக்கிடக்கிறது..
சந்தோஷங்களோ
சற்றும் அசைவின்றி
சமாதியாகி விடுகின்றது!

பூஞ்சோலையாக
மலர வேண்டிய வாழ்க்கை..
தகிக்கும் பாலையாக
நகர்ந்து செல்கிறது!

படுக்கையில் கடித்துவிடும்
மூட்டைப் பூச்சிகளாய்
துன்பங்கள் என்
தூக்கம் தின்கிறது!

பாறைகளுடன் நான்
சண்டையிட்டிருக்கிறேன் - என்
இதயக்குமுறல்கள்
இந்த உலகில்
எதிரொலிக்கவே இல்லை என்று!

ஆனால்
பூங்காற்று மட்டும் வந்து
என் காதுகளில்
ரகசியம் சொன்னது
வாழ்க்கை வாழ்வதற்கே என்று!!!

ஒப்பனைகள்!


வாக்குறுதியின்
மகிமை தெரியாதவர்களெல்லாம்
மேடைகளில்
வாக்குறுதிகளை
அள்ளி வீசுகிறார்கள்!

மனிதநேயம்
துளியுமற்றவர்களெல்லாம்
அதைப்பற்றி
கதைகதையாய்ப்
பேசுகிறார்கள்!

ஏழைகளைப் பார்த்து
நக்கலாக சிரிக்குமவர்கள்
தம் முன்னைய
வாழ்க்கையைப்பற்றி
சிந்திக்கவேயில்லை!

அகம்பாவத்தை
அகம் முழுவதும் சுமந்துகொண்டு
ஆன்மீகம் பேசுவது
வேடிக்கையாக இருக்கிறது!

மனிதத்தனமற்று
நடக்குமவர்கள்
மகான் என்று
தன்னை சொல்லிக்கொள்வதும்
வாடிக்கையாக இருக்கிறது!

அவர்களின்
முகத்திற்கும் அகத்திற்கும்
சம்பந்தமேயில்லாத பின்
ஒப்பனைகள் மட்டும் எதற்கு
அகற்றி விடட்டும்!!!


வாக்குறுதியின்
மகிமை தெரியாதவர்களெல்லாம்
மேடைகளில்
வாக்குறுதிகளை
அள்ளி வீசுகிறார்கள்!

மனிதநேயம்
துளியுமற்றவர்களெல்லாம்
அதைப்பற்றி
கதைகதையாய்ப்
பேசுகிறார்கள்!

ஏழைகளைப் பார்த்து
நக்கலாக சிரிக்குமவர்கள்
தம் முன்னைய
வாழ்க்கையைப்பற்றி
சிந்திக்கவேயில்லை!

அகம்பாவத்தை
அகம் முழுவதும் சுமந்துகொண்டு
ஆன்மீகம் பேசுவது
வேடிக்கையாக இருக்கிறது!

மனிதத்தனமற்று
நடக்குமவர்கள்
மகான் என்று
தன்னை சொல்லிக்கொள்வதும்
வாடிக்கையாக இருக்கிறது!

அவர்களின்
முகத்திற்கும் அகத்திற்கும்
சம்பந்தமேயில்லாத பின்
ஒப்பனைகள் மட்டும் எதற்கு
அகற்றி விடட்டும்!!!

தீராத மன நதி ஓட்டம்!




சொந்த மண்ணில்
எனக்கோ
சொல்ல முடியாத
சோகங்கள்
எனைச் சுற்றி..
வெந்த மனதில்
புண் கிளரும்
கொடூரமான காகங்கள்!

வெந்துபோன என்
உள்ளத்தில்
வந்துபோனவை
துன்பம் மட்டுமே..
நாதியற்ற என் நிலை
தேதி தெரியாத
முடிவை நோக்கியே!

தீர்ந்துவிட முடியாத
துன்ப ஓடைகளை
வலுக்கட்டாயமாக
கட்டுப்படுத்தினேன்...
என் கண்ணீருக்குள்
ஆயிரம் கவலைகளை
அடைகாக்கிறேன்!

சொல்லி(ல்) தீராத
சோகங்கள்
தினமும் என்னை
வாட்டுகிறது...
கேள்விக்குறியாய்
என் நிலையை
காலம் வந்து
காட்டுகிறது!

சீரான கதியினில்
என் மன நதி கடந்தாலும்
துயரச் சூரியன் சுட்டெரித்து
வரட்சியாக்கிப் போனது!

உப்பளமாய் படிந்த
சுவைகளை மாத்திரம்
பருகிவிட்டு..
அப்பளமாய்
மனசுடைத்து
கீறல் தருவதும் ஏனது???

Friday, March 4, 2011

புதிய சட்டங்கள்!




வன்னி நகரில் நடந்த
வன்செயல்களின் கொடூரத்தில்...
இடம்பெயர்ந்தலைந்தேன்
தாங்காத சோகத்தில்!

போர் மேகங்கள் ஒன்று சூழ்ந்து
பொழிந்தன அன்று
குண்டு மழைகள்..
ஈவிரக்கம் துளியுமின்றி
துண்டாடப்பட்டன
அப்பாவிகளின் தலைகள்!

தடுப்புக்காவலில்
தாளாத
சோகம் கண்டவர்கள்
இன்றும் கூட
என்ன ஆனார்களோ?

பதுங்கு குழிக்குள்
பதுங்கியே
பாதி வாழ்க்கை முடிந்தாச்சு..
பயத்துடன் வாழ்ந்த காலம்
இப்போதுகளில் தான் முடிவாச்சு!

புருஷனையும்
பிள்ளைகளையும் இழந்து
இந்த ஏழை படும் பாட்டை
யாரறிவார்...
எங்களைப் போன்றே வாழ்விழந்த
அனைவரும் தான்
இதை அறிவார்...

வேதனை வாழ்வு
வெறுத்த நிலையில்
கூடி வந்தன
மீள்குடியேற்றும் திட்டங்கள்...

சொல்லுங்கள் ஐயா!
எதுவென்றாலும்
என் குடும்பத்தை மீட்டித்தருமா
இந்த புதிய சட்டங்கள்???

வெற்றிகள் உன்னை ஆளட்டும்!


துன்பங்கள்
உன் நெஞ்சில்
முட்டுகின்றதா?
துயரங்கள்
உன் கதவைத்
தட்டுகின்றதா?

இதயமே
இடிந்து போனதாய்
சாய்ந்து விடாதே!
எதுவுமே
கிடைக்காதது போல்
ஓய்ந்து விடாதே!

சமயம் வந்தால்
இமயமும்
உன் காலடியில்...
இறைவனின் நாடினால்
நீ புரளலாம்
கோடிகளில்!

உடைந்து போனால்
உன் மனமும்...
கிடந்து அழுவும்
அனுதினமும்!

தோல்விகள் வெறும்
சம்பவம் தான்...
துணிந்திடு தோழா
வெற்றி சரித்திரம் தான்!

நிலா உனக்கு
பன்னீர் தூவும்...
விண்மீன்கள்
வாழ்த்துரைக்கும்!
கானகப் பூக்கள்
உன்னைக் கண்டு
தலையாட்டும்...
விடியலில் உனக்கு
விலாசம் வரும்!

முயற்சியற்று
நீ வாழ்ந்தால்
பின் எப்படி
சுவர்க்கம் தெரியும்?

தைரியம் கொண்டு
நீயிருந்தால்
இன்பக் கனவுகள்
ஓடி வரும்..
கோழையாக வாழ்ந்திட்டால்
காணாத கவலைகள்
தேடி வரும்!

மானிட வாழ்வு
சிறந்திடத்தான்
அன்பை இறைவன்
படைத்துள்ளான்...
பண்பாய் வாழ்ந்து
வழிகாட்டி
சிறந்திடச் சொல்லி
அவன் சொன்னான்!

போராட்டமான
உன் வாழ்வு
பூந்தோட்டங்களாய் மாறட்டும்...
வெற்றிகள் என்றும்
உன் வாழ்வில்
புதுமையாக ஆளட்டும்!!!

Sunday, February 13, 2011

ஆணவம் கொண்டு வாழ்கிற வாழ்வில்! அல்லது மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்!




அன்றொரு நாளில்
ஏழை என் தோளில்
சேர்த்திருந்தாளே
என் மனைவி..
ஒரு நாள் புசித்தால்
மறு நாள் பசித்தால்
வாய்திறவாளே என் துணைவி!

படிப்பில் அவள் தான்
புலி என்றுணர்ந்து
அறிந்தேன் பிறகு
நானும்தான்..
அதனாலன்றோ
உழைத்ததையெல்லாம்
அவளுக்கு ஈந்தேன்
உண்மை தான்!

கல்வியில் ஆர்வம்
கலைத்திட பயந்தே
அவளை விட்டு
தூர நின்றேன்..
அவளுக்காக எதையெல்லாமோ
இழந்திடவும் நான்
துணிந்து நின்றேன்!

உயர் படிப்பெனக்கு
உற்ற நண்பி தான்
என்று சொல்லியே உருக்குலைந்தாள்..
படிப்பு பரீட்சை
என்று கூறியே
கால் நடையாக
அவள் அலைந்தாள்!

ஒவ்வொரு நாளும்
காலை மாலையென
பாடங்கள் படித்தே
கழித்திட்டாள்..
பரீட்சையில் ஒருநாள்
வெற்றி பெற்றதால்
ஆனந்தத்தில் மகிழ்ந்திட்டாள்!

காலத்தின் கோலம்
மாற்றியதவளை
கோடியாய் அவளும்
உயர்ந்திட்டாள்..
இனி நமக்கெதற்கு
உற்ற துணையென
என்னையும் தான் அவள்
ஒதுக்கி விட்டாள்!

செல்வத்தின் செருக்கில்
செந்தமிழ் மறந்து
ஆங்கிலம் தனையே
உச்சரித்தாள்..
படிக்காதெவரும்
கண்டு பேசினால்
பண்பற்றவரென நச்சரித்தாள்!

அறிவும் ஞானமும்
ஒன்றுசேரவே
அறியாமை மக்களை
அவமதித்தாள்..
ஆணவம் கொண்டு
வாழ்கின்ற வாழ்வில்
ஏழைகளையே
அவள் மிதித்தாள்!

அவளைத் தேடிய
அவளை நாடிய
பாமர மக்களை
அவள் வெறுத்தாள்..
உதவிகள் என்று
கேட்டு நின்றதால்
அவர்கள் வந்தாலே
முகம் கறுத்தாள்!

பதவிகள் உயர்ந்திட
பணமழை தூவிட
அதிகாரத்தில்
அவள் மிதந்தாள்..
ஆடம்பரமாய்
வாழ்வு களித்து
ஆண்டவனையும்
அவள் மறந்தாள்!

இத்தனை செல்வம்
இன்பமாய் இருந்தும்
இறைவனின் நாட்டம்
எதுவென்றால்..
ஆழிப்பேரலை கொடூரமாக
வந்தழித்ததை
தன் விதி என்றாள்!

தள்ளி ஒதுக்கிட்ட
அத்தனைப்பேரும்
அவளுக்கன்பு காட்டிடவே..
கணவன் என்னைக்கதி
என்றெண்ணி
காலங் கடந்து வந்திட்டாள்!

அவளொரு பேதை
என நான் அறிவேன்..
மன்னித்து அவளை
ஏற்றிட்டேன்..
வெட்கம் கொண்டு
கதவிடுக்கினிலே
ஒழிந்து கொண்டு
நாணிற்றாள்!!!

Saturday, January 1, 2011

சங்கீதமிசைக்கும் சமாதானப் புறா!


அண்ணார்ந்து பார்த்தேன்..

அழுதபடி காட்சியளித்தது
அகல விரிந்த வானம்!

தினமொன்றிலே
பலதடவை கேட்கும்
வெடிகுண்டுச் சத்தத்தால்
அன்றெல்லாம் ஊர்க்குருவிகளும்
 உல்லாசம் மறந்திருந்தன!

ஷெல்வீச்சைக் கேட்டே
பழகிப்போயிருந்தாலும்
எங்கள் உயிர்மூச்சு
ஸ்தம்பித்துப்போனது
உண்மை தான்!

நாலாபுறமும் நோக்கினேன்
திட்டுத்திட்டாக
இரத்தம் உறைந்து
படிந்து கிடந்தது!

முட்டிமோதின
எதிலோ என் கால்கள்!
ஓ.. துண்டாடப்பட்ட யாரோ
ஒருவரின் பாதங்கள் அவை!

அகோரமான இந்தக் காட்சியை
படமெடுத்திட இயலாமல்
ஒழிந்து கொண்டது
அப்போது என் இதயம்!

உயிர்பிழைத்த
அந்த சம்பவங்கள்
தற்போது இல்லாமல்
சங்கீதமிசைக்கிறது
சமாதான வெண்புறா!!!