Thursday, July 19, 2012

ஓலைக் குடிசையும் பாதி நிலவும்!







வாழ்க்கையை மாற்றிட்டு
எமைச் சூழ்ந்த வறுமை - என்றும்
எம் வானில் விடியாத கருமை!
யாரென்ன சொன்னாலும்
எவரென்ன செய்தாலும்
மறக்காமல் வாழ்கிறோம் 
நாளை வரும் மறுமை!

உடைந்து தொங்குது
என் குடிசைக்கூரை - வார்த்தோமே
வீடு பணம் சுனாமிக்குத் தாரை!
பொல்லாத கஷ்டங்கள்
பல வந்த போதும்
அல்லாஹ்வைத்தவிர
நம்பினோம் யாரை?

அந்நாளில் என்னிடம்
எத்தனை காரு - இன்றெல்லாம்
எனைச்சுற்றிக் கஷ்டம் தான் பாரு!
பஞ்சம் தான் வந்தாலும்
கொஞ்சம் தான் தின்றாலும்
மாறிட்டு வந்தோமே
ஊர்விட்டு ஊரு!

அன்றவர்கள் எனைப் பார்த்து
பணம் பண்ணக் கற்க -
இன்றவர்கள் முன் வேலைக்காய்
கைகட்டி நிற்க - மதியாமல் என்னிடம்
லஞ்சம் தான் கேட்டு
நின்றவர் எல்லோர்முன்
என் மானம் விற்க!

படிக்கின்ற புள்ளைகள்
பசியால தவிக்க - என்னால
முடியல்ல இனிமேலும் சகிக்க
எங்கிட்ட கடன்கேட்ட 
அத்தனைப்பேரும்
நான் கேட்டுப் போனதும்
வந்தாங்க மிதிக்க!

உறவினர் மீதான உறவைத்
துறந்து - அவர்களின் சந்தோஷம்
துக்கம் மறந்து
பணக்காரருக்கும் 
அந்தஸ்துள்ளோருக்கும்
தானம் செய்தலா
உண்மை விருந்து!

வெளியூரு போறேன்னு
நான் போன போது
சம்பளம் தராமல்
படுத்தினான் பாடு!
நான் செய்த பாவம் தான்
ஏதென்று அறியேன்
எந்நாளும் சூழுது
என்னைத்தான் தீது!

துன்பங்கள் வந்தால்
எங்கே நாம் ஓட..
விதியின் விளையாட்டில் 
மனசெல்லாம் வாட!
படச்ச றப்பு தான்
எங்கள என்றும் 
காப்பாத்த வேணும்
வேறென்ன பாட?

பாவங்கள் முழுசாக
எம் நெஞ்சில் நீக்கம்
அல்லாஹ்வின் ரஹ்மத்து 
உள்ளத்தில் தேக்கம்!
தொழுகையும் நோன்பும்
ஸக்காத்தும் செய்ய
வரவேண்டும் இதயத்தில்
உற்சாகம் ஊக்கம்!

குர்ஆனின் ஓசை
பலமாய் ஓங்க - பலாய் முஸீபத்
முழுசாய் நீங்க..
பள்ளிக்குச்சென்று
ஒன்றாகக் கூடி 
ஓதிடுவோமே நன்றாக நாங்க!

ஓலைக்குடிசையில்
ஏழையின் சீவியம் -
இரவினில் கூரையில்
பால் நிலா ஓவியம்!
நாள் முழுதும் காய்ந்தாலும்
பல காலம் மாய்ந்தாலும்
சோகமாய்த் தொடருது 
துன்பத்தின் காவியம்!

செல்வமாய் வாழ்ந்தது தான்
எந்தன் மடமை -
இஸ்லாத்தைத் தவிர
இன்றில்லை உடமை!
தீமைகள் தவிர்த்து
தீன் வழி நடந்து
வாழவேண்டியது 
அடியேனின் கடமை!!!