Wednesday, January 7, 2009

குரலுடைந்த குயில் !

சோலை மலர்களே - அந்த
சுந்தரனின் நினைவால் சோகமாய்
சோர்ந்து போய் இச்சுந்தரி
இருப்பதை அறிவீ;ர்களா?
ஓடும் மேகங்களே...
மன்னனின் மௌனத்தால் - இம்
மங்கையின் மாறாத மனம்
மங்கிக் கிடப்பதை மொழிவீர்களா?
செந்தூரப் பூக்களே
சேர்ந்தழும் என் தேகத்தை
தேற்ற தேனிலும் இனியவனை
தெம்போடு திரும்பிட
சொல்வீர்களா?
தென்றல் சலசலப்புகளே
என் உயிரில் திராணியற்று நான்
திகைப்புடன் கருகிக் கொண்டிருப்பதை
தலைவன் அவனிடம் செப்புவீர்களா?
கூவுங் குயில்களே...
இந்தக் குயில் கூண்டுக்குள்
அடைபட்டுக் குரலுடைந்து
கூவ முடியாதிருப்பதை
இளவரசன் அவனிடம்
முறையிடுவீர்களா?
-------------------------------------------------------
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

மௌனத் துயரம் !

மலரும் தென்றலும்

உரையாடும் மௌன மொழியாக

மனத்துயரங்கள் கனத்து

கண்ணில் கரையும்!


காலம் தந்த சவுக்கடியால்

காயப்பட்ட இதய ரணங்கள்

கணத்துக்கு கணம்

கண்ணெதிரே கோலம் போடும்!


முட்டைக்கோதாய்

உடைந்து நொறுங்கிய

இதயச் சுவரில் ஒட்டியவாறு

நினைவுத் துலையில்

தோரணங்கள் ஆடும்!


தூரப்படாத துன்ப நினைவுகள்

தூக்கத்திலும் விழிப்பிலும்

தொடர்ந்து நின்று

மௌனத்துயரமாக பாழ்படும்!
------------------------------------------------------

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

என் இதயத் திருடிக்கு !

கற்பனைகளோ தாராளம்

கவிதைகளும் ஏராளம்

பாடுகின்றேன் நான் பூபாளம்

புரியாதது ஏன் என் சுந்தரியே!


வேதனையில் வாடுகின்றேன்

உன்னைத் தானே தேடுகின்றேன்

பாசமெல்லாம் பாதியிலே

பிரிந்தது ஏன் பைங்கிளியே!


நிமிடங்கள் பல கழிந்து

தருணங்கள் பல மறைந்து

வருடங்கள் பறந்ததெல்லாம்

கொஞ்சம்கூட நினைவில்லையா?


கொடுமைகள் எனை உதைத்து

கடுமையாய் எனை வதைத்து

சோகம் தந்த வலிகளெல்லாம்

துளியளவும் விளங்கலியா?


காதலை நற்காவியமாய் பாடியும்

உனக்கென்னடி என் மேல் வெறுப்பு

நிஜத்தில் நீயென்னை விரும்பின்

அரும்பாய் மலருமே சிரிப்பு!


மருந்தாக என்னுள் நீ வந்தால்

மோட்சங்கள் பெற்று மீண்டும் பிறப்பேன்

குறும்பாகத்தான் சொல்லிப்போயேன்

அந்தக் காதலால் கவலைகள் துறப்பேன்!


நீ சென்றிட்டால் எனை விட்டுப் பிரிந்து

திரிவேன் நான் என் நிலையை மறந்து

தேகம் கிடக்கும் குற்றுயிராய் எரிந்து

அப்போ அது காகங்களுக்கும் விருந்து!


தந்திடாதே ஆழ் நெஞ்சில் காயம்

அது ஒருபோதும் ஆவதில்லை ஞாயம்

நீ தானே செய்தாய் மாயம்

எனை குறைகூறித்திரிவது அநியாயம்!
------------------------------------

வெலிகம ரிம்ஸா முஹம்மத்