Sunday, May 11, 2008

உடைந்த இதயம்


நட்புடன்
உறவாடினார்கள்
பல நண்பர்கள்
சிலர்
உடைத்தே விட்டார்கள்
இதயத்தை
உடைந்த இதயத்தை
நீ ஒட்டி வைத்தாய்
இனிய நண்பனாக வந்து
ஒட்டும் போது நான்
உணரவில்லை என்றாவது
நீயும் உடைப்பாயென்று

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (இலங்கை)

ஒரு குரலின் குயில்


பத்திலொரு நூற்றாண்டாய்
படித்துக் காட்டுகின்ற என் கவிதை
காத்திரமான இப்பூவுலகில்
நித்தியமான என் அன்பை
மதித்திடத் தெரியாமல் - நீ
மிதித்துக் கொண்டோடுவது எங்கே சொல் ...

ரிம்ஸா முஹம்மத்,
வெலிகம,
இலங்கை.

விடியலை நோக்கி


ஓ...இளைஞனே !
உன்னை நீயே
காயப்படுத்திக்கொண்டு
ஒரு மூலையில்
ஒதுங்கிக்கொண்டால்
வெற்றி வாய்ப்புக்கள்
விலாசம் தெரியாமலே
போய்விடும் !

முட்களுக்கு
மத்தியில்தான்
ரோஜாக்களின்
ராஜாங்கம் நடப்பது
உனக்குத்
தெரியாதா...என்ன ?

முத்துக்குளிப்பவன்
மூச்சை அடக்கித்தான் ஆக வேண்டும் !
இமய சிகரத்தை
எட்ட நினைப்பவன்
கடினமான பாறைகளைக்
கடந்துதான் தீரவேண்டும் !

நெஞ்சாரத்துணிவை வளர்த்து
நம்பிக்கை நீர் பாயச்சி
விடியலை நோக்கி விழித்தெழு !
வானம் உனக்கு வசமாகும் !!

ரிம்ஸா முஹம்மத்,
வெலிகம,
இலங்கை.