Wednesday, January 8, 2014

மனிதர்கள் பலவிதம்!


பொறாமைதனை நெஞ்சில் ஏற்றி
பொருமிப் பொருமி அலைகிறான்
எருமைபோல் நடந்துகொண்டு
ஏமாறுபவன் இருக்கிறான்!

பேராசையால் மூளைமங்கி
பேந்தவிழிப்பவன் இருக்கிறான்
போராசையினால் போட்டிபோட்டு
பணக்காரனானவன் இருக்கிறான்!

பெண்ணாசை பித்துப் பிடித்த
பெரிய மனிதன் இருக்கிறான்
பொன்னாசையால் விழிகள் பிதுங்கி
பொறாமைப்படுபவன் இருக்கிறான்!

காசு கொடுத்து தீயதுசெய்து
காசினியில் வாழ்பவன் இருக்கிறான்!
மாசு கொண்ட உள்ளத்தாலே
பாசம் பொழிபவன் இருக்கிறான்!

பேனை பிடித்து பெயருக்காக
எழுதும் மனிதன் இருக்கிறான்
ஷபோனில்| பேசி பெண்களையெல்லாம்
ஏமாற்றுபவன் இருக்கிறான்!

வட்டி உண்டு வாழ்க்கையிலே
வயிறு வளர்த்தவன் இருக்கிறான்
முட்டி நிறைய கள்ளு, சாராயம்
காய்ச்சி விற்பவன் இருக்கிறான்!

பக்தி கொண்டு நல்லவனைப்போல்
பணிந்து நடப்பவன் இருக்கிறான்
கத்தி கொண்டு பிறரைமிரட்டி
காசு பறிப்பவன் இருக்கிறான்!

மாடி வீடு, காரு, காசு
தேடித் திரிபவன் இருக்கிறான்
பதவி, அதிகார ஆசை பிடித்து
பல்லு இளிப்பவன் இருக்கிறான்!

கண்ணகி பற்றி கவிதை, கதையென
எழுதிக் குவிப்பவன் இருக்கிறான்
கற்பழித்து பெண்களையே
காமுறுபவன் இருக்கிறான்!

பொய்யை மட்டும் சரியாக
பேசும் மனிதன் இருக்கிறான்
மெய்யை மட்டும் மருந்துக்குக் கூட
உச்சரிக்காதவன் இருக்கிறான்!!!

2 comments:

Anonymous said...

சிறந்த - மிகச் சிறந்த கவிதை.. வாழ்த்துக்கள்!

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

Anonymous said...

சிறந்த - மிகச் சிறந்த கவிதை.. வாழ்த்துக்கள்!

-தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்