Wednesday, February 29, 2012
கறைகள்!
கறை படிந்த வரலாற்றில்
கவலைகள் ஏராளம்
அகதியாய்ப் போனோரில்
ஆற்றாமைகள் தாராளம்!
இருபத்தொரு வருடங்கள்
இதயத்துடிப்பு மறந்து..
ஊரெண்ணியிருக்கிறார்கள்
ஆசைகளைத் துறந்து!
வடபுலத்து மக்களவர்
வெடவெடத்தல் மறக்கலாமோ?
இட நிலபுலன் யாவையும்
இழந்த சோகம் ஈடேறுமோ?
வயோதிபரும் நோயாளியும்
வருத்தத்துடன் நடைநடந்தே
தண்ணியின்றி தவித்தபோது
மனம் கொதித்த கதை கொடிது!
ஆடு கோழி மீன் என்றே
ஆக்கிச் சோறு தின்றவர்கள்
கஞ்சிக்கும் வழியின்றி
காய்ந்திருந்தார் அவனியிலே!
இன்றும்தான் அலறுகின்றார்
நடந்தவற்றை நிதம் எண்ணி
அவர்களுக்காய் விடியல் தர
எத் தலைவன் குரல் கொடுப்பான்?
ஒரே தேச மக்களென
எல்லோரையும் மதித்திங்கு
ஆதரிக்கும் ஒரு தலைவன்
எங்கிருந்து முன்வருவான்???
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment