Wednesday, November 21, 2012
முகவரி தேடும் மலையகம்!
முகவரி என்பதன்
முதலெழுத்து எங்கே
முகவரி தரப்போகும்
முதல்வனும் எங்கே?
ஆண்டாண்டு காலங்கள்
ஆட்சியினைப் புரிந்தார்கள்
தொழிலாளியான எம்மை
தொலைதூரம் எறிந்தார்கள்?
பச்சையணி தேயிலை மலையில்
இச்சையோடு துரையிருப்பான்
கொழுந்தை பெண்கள் பறித்தாலும்
கொடும்பேச்சால் துளைத்தெடுப்பான்!
எம் பாட்டில் நாமிருந்தோம்
துணையின்றி வாழ்ந்திருந்தோம்
அவர் பாட்டுக்கு ஆடச் சொன்னார்கள்
அவர் மெட்டுக்கு பாடச் சொன்னார்கள்
ஆட்டங்கள் ஓயவில்லை - இன்னும்
எமக்கு ஓய்வும் இல்லை!
சிங்கமாய் கர்ஜித்தோம்
சிற்றெரும்பாய் ஆக்கிவிட்டார்கள்
சிட்டுக்களாய் சிறகசைத்தோம்
சிறகிரண்டை உடைத்துப் போட்டார்கள்!
ஒரு கையில் பொட்டலமும்
தலையிலொரு கூடையுமாய்
மறு வேலை உணவுக்காய்
மலைக்கு நாம் புறப்படுவோம்!
கைகட்டி வாய்பொத்தி
கைதியாய் இருக்கின்றோம்
கணக்குப் பிள்ளையின் முன்
கடுகாக சிறுக்கின்றோம்!
கவலைகள் மறப்பதற்கு
கசிப்பொன்றும் மருந்தில்லை
ஆனாலும் அதைவிட்டால்
எம்மவர்க்கு வழியில்லை!
பொருளாதாரச் சுமை
பொறுமையை சோதிக்குது
பணங்காசு குறைஞ்சதால
படிப்பை அது பாதிக்குது!
நெருப்பட்டி குடில்களில்
நெரிசல்கள் தினம் நிகழும்
நித்தம் எம் துயர்கண்டே
நிலவோடு இரவு அழுவும்!
மழைச் சாரல் அடித்தாலும்
வெயில் கொளுத்தி எரித்தாலும்
வாழ்விலொரு மாற்றமில்லை
வழிதெரிய ஏற்றமில்லை!
மலையக மைந்தர்களே
மனசில் இதைப் பதித்திடுங்கள்
இனியாவது நாம் மிளிர
இனிய விதி படைத்திடுங்கள்!
முகவரி என்பதன்
முதலெழுத்து ஆகிடுங்கள்
முகவரி தந்திடும்
முதல்வனாய் மாறிடுங்கள்!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment